தானிய உணவு சாப்பிடுங்க ஆரோக்கியம் உத்தரவாதம்
ஒருவருடைய உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பது அவருடைய உயரம், வயது, பாலினம் ஆகியவற்றைப் பொருத்தே கணிக்கப்படுகிறது. உடற்பருமன் என்பது திசுக்கள் இயல்பான அளவை விட அதிகளவில் உருவாவதாலும், கொழுப்பு செல்கள் பெரியதாக வளர்வதாலும் ஏற்படுகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவில்லை என்றால், நாட்பட்ட வியாதிகளான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு, பித்தப்பை கோளாறு ஆகியவை தொடரக்கூடும். அத்துடன் மூட்டு வலி, இடுப்பு வலி, ஹெர்னியா, வெரிகோஸ் வெயின் போன்ற உடல் உபாதைகளும் தோன்றும். உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சியுடன் சத்தான உணவுகள் அதாவது கொழுப்பை கரைக்கக்கூடிய மற்றும் கொழுப்பே இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், நொறுக்குத் தீனிகளையும் முற்றிலும் தவிர்க்கவேண்டும். அதற்கு மாற்றாக நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக முழு தானியங்களையும் எடுத்துக் கொள்ளலாம். முழுதானியங்கள் நார்ச்சத்து மிகுந்த வெளிப்பகுதி, உயிர்ச்சத்துகள் மிகுந்த விதைப்பகுதி மற்றும் மெத்து போலிருக்கும் உட்பகுதி என மூன்று பகுதிகளாக இருக்கும். தானியங்களை முழு தானியங்கள் என்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் என்றும் வகைப்படுத்தலாம். முழுதானியங்களில் முழுமையாக, உயிர்ச்சத்து நிரம்பியிருக்கும். உதாரணத்துக்கு, சிவப்பு அரிசி மற்றும் ஓட்ஸ். சுத்திகரிக்கப்பட்ட தானியங்களான வெள்ளை அரிசி மற்றும் ரொட்டியில் உயிர்ச்சத்துகளான வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து நீக்கப்பட்டிருக்கும். தானியங்களில் கிளைசிமிக் இன்டெக்ஸ் எனப்படும் குளுக்கோஸ் அளவு குறைவாக உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்து அதிகமிருப்பதால், வாய்வு தொல்லையை குறைக்கிறது. இதனால் நம்முடைய உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. முழு தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு, வலிப்பு மற்றும் இதய நோய்கள் வருவதில்லை என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. கோதுமையில் காணப்படும் கரையாத நார்ச்சத்து, நமது ஜீரண மண்டலத்தை சுத்தப்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. முழு தானியங்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு, புற்று நோய் மற்றும் அஜீரண கோளாறுகள் பெரும்பாலும் வருவதில்லை. தானியங்களை உணவில் பயன்படுத்தும் போது, நம்முடைய உடல் எடை சமநிலையில் இருக்கும். முழு தானியங்களை சாப்பிடுபவர்கள் எடை குறைந்து காணப்படுகின்றனர்.