கேன்சர் உறுதியான நான்கு மணி நேரத்தில் இலவச சிகிச்சை!
'லுகீமியா' எனப்படும் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் இருந்து பரிந்துரை செய்யப்படும் ரத்த 'மாதிரி'கள், எங்களுக்கு அதிகம் வருகின்றன. லுகீமியா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யும் முதல் கட்ட பரிசோதனைக்கு மட்டும் 50,000 ரூபாய் செலவாகும். ரத்தத்தில் கேன்சர் இருப்பது உறுதியான பின், எலும்பு மஜ்ஜை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஒரு பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக தனியார் மருத்துவமனையில், காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும், 'டே கேர்' முறையில், பரிசோதனை செய்கின்றனர். இதற்கான கட்டணம் மட்டும் 25,000 ரூபாய். குழந்தைகளுக்கு வரும் ரத்த புற்றுநோய்களில், ஒரு வகையான, 'பி -- ஏஎல்எல்' என்ற வகை தான் 80 சதவீத குழந்தைகளை பாதிக்கிறது. 'புளோசைட்டோமெட்ரி' என்ற சிறப்பு டெஸ்ட் செய்தால், எந்த வகை ரத்த புற்றுநோய் என்பதை உறுதி செய்யலாம். இதற்கான கட்டணம் 20,000 ஆயிரம் ரூபாய். தொடர்ந்து கேன்சருக்கான சிகிச்சை எடுக்க வேண்டும். இப்படியே லுகீமியா பரிசோதனை, சிகிச்சைக்கான செலவு பல லட்சங்களை தாண்டும். பொருளாதார நிலையில், பின் தங்கிய குழந்தைகள் தான் ஓமந்துாரார் மருத்துவமனை வருவர். சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஒப்பந்தத்தின் அடிப்படையில், பரிசோதனைகளுக்கு நோயாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தொடர்ந்து கீமோதெரபி, எலும்பு மஜ்ஜை, அறுவை சிகிச்சை என்று அனைத்தும் கட்டணமில்லாமல் அரசு மருத்துவமனையில் தரப்படுகிறது. லுகீமியா பாதித்த குழந்தைகள் மிகவும் பலவீனமாக இருப்பர்; நோய் அறிகுறிகள் தெரிந்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே, உடல் நலம் மிகவும் பாதிக்கப்படும். அரசு மருத்துவர்கள் பரிந்துரை செய்து அனுப்பும் ரத்த மாதிரிகளை, நான்கு மணி நேரத்தில் பரிசோதித்து லுகீமியா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்து, அன்றே முடிவுகளை டாக்டர்களுக்குத் தருகிறோம். இதனால் கால தாமதம் இல்லாமல், கேன்சர் சிகிச்சையைத் தொடங்க முடிகிறது. மிஞ்சிய ரத்த மாதிரியில், 'சைட்டோ ஜெனிடிக்' என்ற பரிசோதனை செய்தால், நோயின் தன்மை எந்த அளவில் இருக்கிறது; எந்த அளவு விரைவாக சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும், உட்பட நோயின் தன்மையை முழுமையாக அறிய மு டியும். இந்த முடிவுகள் 10 நாட்களுக்குள் வந்து விடும்; 28 நாட்களில் முதல் கட்ட சிகிச்சை முடியும் போது, நோயின் தன்மை எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் எந்த அளவு வாய்ப்பு உள்ளது, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா போன்ற அனைத்தையும் சொல்ல முடியும். இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள், அரசு டாக்டர்கள் சிபாரசு செய்யும் நோயாளிகளுக்கு, கட்டணமி ல்லாத பரிசோதனை வசதிகள் இருப்பது, பல டாக்டர்களுக்கு தெரிவதில்லை. இந்த நவீன வசதி எல்லா இடத்திலும் இருப்பதில்லை. காரணம் இந்த பரிசோதனை செய்வதற்கு சிறப்பு பயிற்சி தேவை. மருத்துவம் படித்த பின், மூன்று ஆண்டுகள் இதற்கான பயிற்சி பெற்றவர்களால் தான் இதை செய்ய முடியும். பொருளாதார வசதியில், பின் தங்கியுள்ள நோயாளிகள் இதை பயன்படுத்திக்கொள்ள அரசு டாக்டர்கள் உதவ வேண்டும். டாக்டர் அஸ்மா பீபீ, ரத்தவியல் நோய்களுக்கான மருத்துவ ஆலோசகர், நியூபெர்க் பரிசோதனை மையம், சென்னை 044 - 41412222, 97003 69700 sama.bibi@neubergdiagnostics.com