பப்பாளி டெய்லி பாதி பிரச்னை காலி
பப்பாளிப் பழம் தெருவோரங்கள், தள்ளு வண்டிகளில் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றன. பழங்களை பொருத்தவரை, கண் துவங்கி, இதயம் வரை எல்லாவற்றுக்கும் சிறந்தது. வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இது பொருந்தும். மூன்று வேளையும் பழங்கள் சாப்பிடுவது ரொம்ப நல்லது என, மருத்துவம் கூறினாலும், பழங்கள் விற்கும் விலைக்கு அது சாத்தியமல்ல...!ஆனால், உங்களுக்குக் கை கொடுக்கிறது பப்பாளிப் பழம்.இளம் சிவப்பு நிறத்தில் தொட்டால் மென்மையாக இருக்கும் பப்பாளிப்பழம் உடனே சாப்பிட உகந்தது. ஆங்காங்கே இன்னும் மஞ்சள் திட்டுக்கள் உள்ள பழத்தை ஓரிரு நாட்கள் பழுக்க வைத்துச் சாப்பிடலாம். பச்சை நிறப் பப்பாளி அப்படியே சாப்பிட உகந்தது அல்ல; மாறாக, கூட்டு சமைத்து சாப்பிடலாம். அல்லது, சாலட் செய்து உண்ணலாம்.பழத்தை உண்பதால் நன்மை என்ன?இயல்பாகவே, இனிப்பு சுவை கொண்ட பப்பாளிப் பழங்களில், கரோட்டின்ஸ், வைட்டமின் ஏ, பி, சி, ஈ, ஃப்ளாவனாய்ட்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்து நிறைந்துள்ளது.இதயம் வலிமை பெற தேவையான சத்துக்களை தருகிறது. ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது. உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவுகிறது. இதனால் கொலஸ்ட்ரால் உடலில் சேர்வது, தடுக்கப்படுகிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேராமல் தடுத்து, இதயம் பாதிப்பில்லாமல் இயங்க உதவுகிறது.பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது; புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஜலதோஷம், ஜுரம் வராமல் தடுக்கிறது. சுவையை கூட்ட, பப்பாளிப் பழத்தின் மேல், எலுமிச்சைச் சாறு கலந்து உண்ணலாம்.