சர்க்கரைக் கோளாறால் ஏற்படும் மற்ற உடல் பிரச்னைகளை, ஆரம்ப நிலையில் அல்லது வருவதற்கு முன்னரே கண்டறிந்து, தகுந்த மருத்துவ வழிகாட்டுதலுடன் ஆரோக்கியமாக வாழ வைப்பது தான், 'கார்டியோ டயாபடிக்' எனப்படும் இதய - சர்க்கரை கோளாறு டாக்டர்களின் நோக்கம்.கடந்த சில ஆண்டுகளில், மருத்துவ தொழில்நுட்பத்தில், மேலை நாடுகளை விடவும், பல மடங்கு நம் நாடு முன்னேறி உள்ளது. ஆரம்ப பரிசோதனை அறிகுறிகளை வைத்தே, சில ஆண்டுகளுக்கு பின் என்ன மாதிரியான உடல் பிரச்னைகள் வரும் என்பதை எளிதாக கண்டறிய முடியும்.
'டிரெட்மில், ஆஞ்சியோகிராம்'
தேவையான மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றினால், பிரச்னையே வராமல் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழலாம். தடுப்பு தடுப்பு தடுப்பு என்பது தான் அந்த மந்திரம்.இதய ரத்தக் குழாயில், 70 சதவீதத்திற்கு மேல் அடைப்பு ஏற்பட்டால் தான் மாரடைப்பு வரும். இந்த அளவு அடைப்பு ஒரே நாளில் வர சாத்தியம் இல்லை. மரபியல் ரீதியில் இதயக் கோளாறு, சர்க்கரைக் கோளாறு வரும் வாய்ப்பு இருப்பவர்கள், பிரச்னை வருவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் மருத்துவ பரிசோதனை செய்திருந்தால், அடைப்பு வர வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை, 'டிரெட்மில், ஆஞ்சியோகிராம்' செய்தால் தெரிந்து விடும்.பெற்றோருக்கு சர்க்கரைக் கோளாறு இருந்தால், குழந்தைகளுக்கு 25 வயதிலேயே முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லேசாக ரத்தக் குழாயில் அடைப்பு ஆரம்பிக்கும் போதே டிரட்மில் பரிசோதனையில் காட்டி விடும். அதன்பின், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள், தொடர் மருத்துவ ஆலோசனை பெற்று, பிரச்னை பெரிதாகாமல் இயல்பாக வாழ முடியும்.தற்போதுள்ள வாழ்க்கை முறையில், 30 வயதிலேயே மாரடைப்பு வந்து விடுகிறது. அப்படியென்றால், குறைந்தபட்சம் 25 வயதில் அடைப்பு உருவாக ஆரம்பித்து இருக்கும். இந்த வயதில் உருவாகத் துவங்கிய அடைப்பை, அடுத்த சில ஆண்டுகள் கழித்து, சர்க்கரைக் கோளாறு வந்த பின் ஏன் கண்டுபிடிக்க வேண்டும்? தற்போது உள்ள நவீன தொழில் நுட்பத்தில், சர்க்கரைக் கோளாறு வருவதற்கு முன்னரே, மற்ற உடல் கோளாறுகள் இருக்கிறதா, வரு வதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை கண்டுபிடித்து விடலாம். சர்க்கரைக் கோளாறை மையமாக வைத்து, மற்ற பிரச்னைகளை கண்டறிந்து சிகிச்சை செய்வதை விட, 'கார்டியோ டயாபடிக்' எனப்படும், சர்க்கரைக் கோளாறு வருவதற்கு முன்னரே கண்டறிந்து தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.சர்க்கரைக் கோளாறு உள்ள ஒருவர், அவரின் டாக்டர் பரிந்துரைத்தபடி மருந்து, மாத்திரை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்கிறார்; ஆனாலும் மாரடைப்பு வந்து விட்டது. எப்படி என்று கேட்டால், சர்க்கரைக் கோளாறை முன்னிலைப்படுத்தி சிகிச்சை செய்கிறாரே தவிர, இதயத்தில் ஏற்படும் கோளாறைப் பார்ப்பதில்லை. இன்னொருவர், விரும்பியதை சாப்பிடுகிறார்... நண்பர்களுடன் மது அருந்துகிறார்; கட்டுப்பாடாக சிகரெட் பிடிக்கிறார். ஆனால், 80 வயது வரை நன்றாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கிறார். எப்படி என்றால், அவர் வெறுமனே சர்க்கரைக் கோளாறை மட்டும் கவனத்தில் கொள்ளவில்லை; மொத்த உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பாக இதயத்தை கவனித்துக் கொள்கிறார்.சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதே நேரம் சர்க்கரைக் கோளாறால் உறுப்புகள் பாதிக்காமல் பாதுகாப்பது சவாலான விஷயம்; அதை செய்பவர்கள் நிம்மதியாக வாழலாம்.
டயாபடிக் கார்டியாலஜி
கொரோனா தொற்றுக்கு பின், 'ஆன்லைன்' மருத்துவ ஆலோசனை எல்லா இடத்திலும் உள்ளது. வீட்டிற்கே வந்து ரத்த மாதிரிகளை எடுத்துச் செல்கின்றனர். எல்லா சிறிய நகரங்களிலும் டிரட்மில் சோதனை இருக்கிறது. எல்லா ரிப்போர்ட்டும் ஆன்லைன் வாயிலாக போனுக்கே வந்து விடுகிறது. இந்த ரிப்போர்ட்டுகளை அனுப்பினால் போதும்... மருத்துவக் குழுவினர் அதை ஆராய்ந்து, பிரச்னை வரும் வாய்ப்புகள் எதில் இருக்கிறது என்பதை சொல்லி விடுவர். எந்த உறுப்பு பாதிக்கும் என்று தெரிந்தால், சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதோடு, குறிப்பிட்ட உறுப்பை பாதிக்காமல் பாதுகாக்க செய்ய வேண்டிய வழிமுறைகளை சொல்லி விடுவோம்.டாக்டர் ஆர். ஜெயபிரகாஷ்,இதய, சர்க்கரை கோளாறு மருத்துவ ஆலோசகர்,சென்னைபோன்: 63840 62000info@safeguardfamily.com