இதய நோய்கள் அதிகமாகி விட்டதா?
நம் நாடு சுதந்திரம் பெற்றபோது, முதியவர்களுக்கு மட்டுமே இதய நோய்கள் வந்தன; இளம் வயதினருக்கும், பெண்களுக்கும் இல்லை; அதிலும் 70, 80 வயது ஆண்களுக்கு தான் வரும்.அந்தக் காலத்தில் இதய நோய் இருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிப்பதற்கு மருத்துவக் கருவிகள் கிடையாது. 'எக்ஸ்-ரே' பரிசோதனையே அரிதாக இருந்தது. தற்போது எளிதாக செய்யப்படும் 'ஈசிஜி' எனப்படும் மின் வரைபட பரிசோதனை செய்வதற்கே நிறைய யோசிப்பர்.இது போன்ற எந்த வசதியும் இல்லாதபோது, நீண்ட நாள் ஆரோக்கியமாக மக்கள் இருந்தனர். இன்று இத்தனை வசதிகள், சிகிச்சைகள் இருந்தும், புதிது புதிதாக பல நோய்கள் வருகிறதே என்றால், அன்று மக்களின் வாழ்க்கை முறை நன்றாக இருந்தது. எதை, எப்படி, எந்த நேரத்தில் சாப்பிடணும் என்று தெரிந்து செய்தனர்.போக்குவரத்து வசதி கிடையாது. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும். குழந்தைகள் கூட, தினமும் 7 கி.மீ., நடந்து சென்றனர். உடல் உழைப்பு அதிகம் இருந்ததால், உடல் பருமன் அரிது. இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களையே சாப்பிட்டனர். எண்ணெய் சத்து மிகக் குறைந்த அளவே இருக்கும்.அப்படி இருந்த காலகட்டத்தில் பெரியம்மை, டிப்தீரியா போன்ற தொற்று நோய்களால் தான் இறப்புகள் நடந்தன. பொன்னுக்கு வீங்கி, காலராவால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர். அந்தக் காலத்தில் காசிக்கு செல்வதாக இருந்தால், உயில் எழுதி வைத்துவிட்டு தான் செல்வர். எப்படி திரும்பி வருவோம் என்பதே தெரியாது. மேலும், பிறந்ததில் இருந்து இறக்கும் வரை எந்த பரிசோதனையுமே செய்திருக்க மாட்டார்கள். இன்று நிலைமை மாறிவிட்டது. குழந்தை பிறந்ததும் பலவித தடுப்பூசிகள், ஆரோக்கியமான உணவு, சுகாதாரம் என்று மேம்பட்டதால், சராசரி வயது உயர்ந்து விட்டது.ஆனாலும், நடைமுறை வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. இரண்டாவது, இத்தனை மணி நேரம் தான் வேலை, இவ்வளவு நேரம் துாக்கம் என்று இருந்த வாழ்க்கை தலைகீழாகி விட்டது.குழந்தைகளுக்கு காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதி சொன்னது போல அன்று வாழ்ந்தனர். இன்று மாலையில் விளையாட இடமே இல்லையே?விளையாட வேண்டிய நேரத்தையும் சேர்த்து படி படி என்று அழுத்தம் தருகிறோம். ஆங்கிலேயரிடம் இருந்து நாம் கற்றுக் கொண்ட மோசமான பழக்கங்களில் ஒன்று சிகரெட், சுருட்டு, பீடி. அடுத்தது, நடமாடுவதே குறைந்து விட்டதால், நகரங்களில் ஐந்து நபரில் ஒருவர், கிராமங்களில் 20 பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளியாக உள்ளனர். இதலிருந்தே புரிந்து கொள்ளலாம், வாழ்க்கை முறை மாறுவதால் இதய கோளாறுகள் வருகின்றன.டாக்டர் எஸ். தணிகாசலம்,இதய நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம், சென்னை044 - 4592 8631, 98400 48269thanikachalam@sriramachandra.edu.in