சின்னஞ்சிறு இதயத்திற்கு தேவை பெரிய கவனம்!
ஆறு மாத குழந்தை ஒன்று, வழக்கமான குழந்தையைப் போல இல்லாமல், பால் குடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது; பால் குடிக்கும் போது, அடிக்கடி மூச்சு வாங்கியது. குழந்தையின் தாய், வீட்டில் இருந்த பெரியவர்கள் இதை கவனித்தாலும், ‘சில குழந்தைகள் இப்படி தான் இருப்பர்’ என்று, இயல்பாக எடுத்துக் கொண்டனர். குழந்தையின் உடல் எடை, எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றதும், குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து வந்தனர். அவசியமான பரிசோதனைகள் செய்து பார்த்ததில், குழந்தையின் இதயத்தில், துளை இருப்பது தெரிந்தது. குழந்தைகள் இதய நோய் சிகிச்சைப் பிரிவில், இதுபோன்ற நிகழ்வுகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. குழந்தைகளுக்கும் இதய நோய் வருமா? நாம் நினைப்பதை விட, குழந்தைகளுக்கு இதய பிரச்னைகள் அதிகமாக உள்ளது. சில குழந்தைகளுக்கு, கருவிலிருக்கும் போதே; சிலருக்கு, பிறந்தவுடன் இதய கோளாறு கண்டறியப்படுகிறது. அறிகுறிகள் குறைவாக, வெளிப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை வளர்ந்த பிறகே, இதய கோளாறு இருப்பது தெரிய வரும். பிறவி இதய குறைபாடுகள் மட்டுமின்றி, வளரும் பருவத்தில், ருமாட்டிக் இதய நோய், இதய தசை நோய்கள், சிறிய ரத்த நாளங்களில் அழற்சியை ஏற்படுத்தும் கவாசாகி நோய் போன்றவை குழந்தைகளின் இதயத்தை பாதிக்கலாம். அறிகுறிகள் பச்சிளங் குழந்தைகள், பால் குடிக்கும் போது, சோர்வடைவது, மூச்சு வாங்குவது, உடல் எடை ஏறாதது, ஓய்வாக இருக்கும் போது கூட மூச்சு விடுவதில் சிரமம், உதடுகள், நாக்கு நீல நிறமாக மாறுவது, அடிக்கடி நெஞ்சு சளி, சுவாசத் தொற்று ஏற்படுவது; வளர்ந்த குழந்தைகள் என்றால், சம வயதுடைய குழந்தை களுடன் விளையாடும் போது, விரைவில் சோர்வடைவது, வழக்கத்திற்கு மாறாக, மூச்சு வாங்குவது, விளையாட்டு, உடற்பயிற்சியின் போது, நெஞ்சுவலி, இதய படபடப்பு, மயக்கம் வருவது, கால்களில் வீக்கம் ஏற்படுவது, நீண்ட நாட்களாக காய்ச்சல் இருப்பது, தொண்டை வலி ஏற்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, காய்ச்சல், மூட்டு வலி வருவது, எல்லா நேரத்திலும் இதயத்தில் இரைச்சல் சத்தம் கேட்பது ஆகியவை, இதய நோய் இருப்பதற்கான அறிகுறி. மரபியல் காரணம் தெரியாமல் திடீர் மரணம், இதய தசை நோய், பரம்பரையாக வரக்கூடிய இதய துடிப்பு கோளாறுகள் இருக்கும் குடும்ப பின்னணியில் பிறந்த குழந்தைக்கு, அவசியம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். நவீன மருத்துவ தொழில்நுட்பத்தால், பிறவி இதய குறைபாடுகளை எளிதாக சரி செய்ய முடியும். சரியான நேரத்தில், சிகிச்சை பெறும் பெரும்பாலான குழந்தைகள், மற்ற குழந்தைகளைப் போலவே பள்ளிக்கு செல்லவும், விளையாடவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் முடியும். டாக்டர் வந்தனா நடராஜன், குழந்தைகள் இதய நோய் சிறப்பு மருத்துவர், சென்னை. 98400 81326 appointment@mehtahospitals.com