உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியம் தரும் பாரம்பரிய தீபாவளி லேகியம்!

வழக்கத்தை விடவும் அதிகமாக, பண்டிகை நாட்களில் சாப்பிடும் பலகாரங்கள், செரிமான மண்டலத்தை பாதித்து, அஜீரணம், வயிற்றுப் பொருமல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். இதற்கு பாரம்பரிய மருத்துவத்தில் நம் முன்னோர் வழங்கி உள்ள மிகச் சிறந்த மருந்துதான் தீபாவளி லேகியம். மருத்துவ குணங்கள் கொண்ட இதை, ‘தீபாவளி மருந்து’ என்றும் அழைப்பது வழக்கம். இது பல குடும்பங்களில், கை வைத்தியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான பொருட்கள் சுக்கு, மிளகு, திப்பிலி, தனியா, சீரகம், ஓமம், கருஞ்சீரகம்: தலா 10 கிராம். சிறுநாகப்பூ, கோரைக்கிழங்கு, சதகுப்பை வைவிடாங்கம், ஏலக்காய், லவங்கப்பட்டை, தலா 5 கிராம். வெல்லம் 150 கிராம். நெய், நல்லெண்ணெய்: தலா 2 -– 3 டேபிள் ஸ்பூன், தேன் 2 டேபிள் ஸ்பூன். செய்முறை லேகியத்திற்கு தேவையான பொருட்களை, மிதமான சூட்டில், லேசான வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பின், மிக்சியில் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். அரைத்த பொடியை ஒரு ஜல்லடையில் போட்டு சலித்துக் கொள்வது நல்லது. மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து, வெல்லத்தை போட்டு, ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் மிதமான தீயில் பிசுபிசுப்பு தன்மை வரும் வரை காய்ச்சி, அரைத்த மூலிகைப் பொடியை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி, கலவை கெட்டியாகும் போது, நெய், நல்லெண்ணெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல், திரண்டு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, வெதுவெதுப்பான சூட்டிற்கு வந்தவுடன் தேன் சேர்த்து நன்றாகக் கலந்து, சுத்தமான, ஈரப்பதம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் காற்றுப் புகாமல் வைத்து, ஈரம் படாமல் உபயோகித்தால், ஓராண்டு் வரை லேகியம் கெட்டுப் போகாமல் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் சிறிய நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம் ; உணவிற்குப் பின் 5 கிராம் சாப்பிடலாம். டாக்டர் எம்.கே.சீனி, துணை இயக்குநர். தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை, சென்னை. 89255 88178 ayurday23tn@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்