உள்ளூர் செய்திகள்

குதிகால் வலியா... இதோ தீர்வு!

குதிகால் பகுதி எலும்புக்கு கீழே, முள் போல சிறிய அளவில் எலும்பு வளர்ந்தால் வலி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் எலும்பு வளர்ந்திருக்கிறதா என்று 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்து, எலும்பின் வளர்ச்சியை பொறுத்து, சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சாதாரண ஒரு அறுவை சிகிச்சை மூலம் இதை சரி செய்துவிடலாம். காலையில் எழுந்ததுமே பாதங்களை கீழே வைத்தால் வலிக்கும். பாதங்களின் தசைகள் இறுகி போனாலும், சரியான காலணிகளைப் பயன்படுத்தாமல் இருந்தாலும் ஏற்படும் வலி இது. சிலருக்கு உடம்பில் உப்பு சத்து அதிகமானாலும் இப்படிப்பட்ட வலி உண்டாகும். வெந்நீர் ஒத்தடம்: ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் பாதங்கள் மூழ்கும் அளவுக்கு, வெந்நீர் ஊற்றி அதில் பாதங்களை, 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். காலை, மாலை செய்து வந்தால் ஓரளவு குணம் தெரியும். மெழுகு ஒத்தடம்: ஒத்தடம் கொடுப்பதற்கென்றே கடைகளில் கிடைக்கும் மெழுகை, வெந்நீரில் போட்டு ஒரு துணியை அதில் நனைத்தால், மெழுகு அதில் ஒட்டிக் கொள்ளும். அதை அப்படியே எடுத்து, குதிகாலில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால், பாதங்கள் நன்கு அழுந்தும்படியான மென்மையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, குதிகால் வலியுள்ளவர்கள், 'மைக்ரோ செல்லுலார் புட்வேர்' அணிவது அவசியம். வீட்டுக்குள் நடமாடும் போதும் அணிய வேண்டும். அப்படியும் உங்கள் வலி சரியாகவில்லை என்றால், பிசியோதெரபி நிபுணரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். வயதுக்கு அதிகமான எடை இருந்தால், அதைக் குறைக்க வேண்டும். அதற்கான முறையான பயிற்சியை மேற்கொண்டாலும், வலி நீங்க வாய்ப்பிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !