நான் ஹிக்கிகோமோரி
பதினைந்து வயது ஹரீஷ் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) அவன் பெற்றோருடன் என்னைப் பார்க்க வந்தபோது, கவனம் மொத்தமும் கையில் இருந்த மொபைல் போனிலேயே இருந்தது. 'பாடத்தில் கவனமே இல்லை டாக்டர். எந்த நேரமும் மொபைல்போன், கம்ப்யூட்டர் தான். படி ஹரீஷ் என்று சொன்னால், கோபம் வருகிறது. 'முதல்ல இங்கேயிருந்து போ' என்று கத்துகிறான். பல இரவுகளில் 2:00 மணிக்கு அவன் அறைக்கு போய் பார்த்தால், லைட், கம்ப்யூட்டர் எல்லாம் அணைக்காமல், மொபைல்போனை கைகளில் வைத்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கிறான்' என்று, அவன் அம்மா நொடிக்கு ஒரு தரம் அவனை திரும்பிப் பார்த்தபடி என்னிடம் சொல்ல, இது எதிலும் ஹரீஷுக்கு ஆர்வம் இல்லை. அவன் விரல்கள் மொபைல்போனில் எதையோ, 'டைப்' செய்து கொண்டிருந்தது.பெற்றோரை வெளியில் அனுப்பிவிட்டு, ஹரீஷிடம் மெதுவாகப் பேசினேன். ஒரு நாளில், 16 மணி நேரம் பேஸ்புக்கிலும்,இன்டர்நெட்டிலும் இருப்பதாகச் சொன்னான். கவுன்சிலிங் மற்றும் மருந்துகள் என்று சிகிச்சை தருகிறேன். இன்று எல்லா மனப் பிரச்னைகளுக்கும் சவால்விடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது, 'சோஷியல் மீடியா அடிக் ஷன்!' உலகம் முழுவதும் இது இருக்கிறது. ஜப்பானில் நன்கு படித்த, திறமையான, 10 லட்சம் இளம் வயதினர், சமூக வலைதளங்களே கதி என்று அறைக்குள் அடைந்து கிடப்பதாக, சமீபத்திய புள்ளி விவரம் கூறுகிறது. இதற்கு, 'ஹிக்கிகோமோரி' என்று பெயர்.சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை, இரண்டுவிதமான அடிக் ஷன் இருக்கிறது. ஒன்று, ஏற்கனவே ஓரளவு மன அழுத்தம், மனப்பிரச்னை, மற்றவர்களோடு சகஜமாக பழக முடியாதவர்கள், சமூக வலைதளங்களில் அடிமையாகி விடுகின்றனர். மனப்பிரச்னை எதுவும் இல்லாமல் இருப்பவர்கள், ஒரு ஆர்வத்தில் சமூக வலைதளங்களுக்குப் போய், நாளடைவில் அதுவே அவர்களின் முழுநேர வேலையாகி விடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில், கவனமாக இருக்க வேண்டும். நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று, ஆரம்பத்தில் விட்டுவிட்டு, மொபைல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை வந்த பின், அதிலிருந்து வெளியில் வருவதற்கான தீர்வைத் தேடுவது சரியல்ல. பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களுக்கு அடிமையாவது போதைப் பொருள் பயன்படுத்துவதைவிட ஆபத்தானது என்று, கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி மனநல ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம்முடைய உணர்வுகள், நடத்தை, செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, மூளையில் உள்ள அமிக்டாலா என்ற பகுதி. அதேபோல நீண்டநேரம் பேஸ்புக், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு, முன்மூளையில் உள்ள ஸ்ட்ரியாட்டம் என்ற சிக்கலான பகுதியையும் பாதிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. மூளையின் நரம்பு செல்களில் சுரக்கும் வேதிப் பொருளான 'டோபமைன்' உடலின் மற்ற பகுதியில் உள்ள நரம்புகளுக்கு தகவல்களை அனுப்புகிறது. பேஸ்புக் போல, ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடிமையாகும்போது, டோபமைன் அதிக அளவில் சுரந்து, குறிப்பிட்ட விஷயத்தில் மேலும் அடிமையாகும் நிலைதான் வருகிறது.டாக்டர் லட்சுமி விஜயகுமார், மனநல சிறப்பு மருத்துவர்