மாரத்தான் ஓட்டமே எனக்கு பிடிப்பதில்லை!
திருமண நிகழ்ச்சி ஒன்றில், 21 வயது பெண் நடனமாடிய போது, மயங்கி விழுந்து இறந்த செய்தியை படித்த போது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். இது போன்றே, மாரத்தான் ஓட்டத்தின் போதும் சிலர் மயங்கி விழுந்து உயிரிழக்கின்றனர்.இதற்கான காரணத்தை அறிய, இதயத்தின் செயல்பாட்டை தெரிந்து கொள்வது அவசியம்.கார் சீராக பயணிக்க, இன்ஜின், பெட்ரோல், பேட்டரி அவசியம். அது போன்று, இதயம் இயல்பாக செயல்பட, இதயத்தின் உள்ளே உண்டாகும் மின் அலைகள், உடல் முழுதும் ரத்தத்தை 'பம்ப்' செய்தாலும், இதயம் இயங்க தேவையான ரத்தத்தை செலுத்தும் ரத்தக் குழாய், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தம் சீராக செல்ல, இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை என்ற இந்த மூன்றும் முக்கியம்.இதய ரத்தக் குழாயில் பிரச்னை ஏற்பட்டால், ரத்த ஓட்டம் தடைபட்டு, 'ஹார்ட் அட்டாக்' வருகிறது. மின் உற்பத்தி சரியாக இல்லாவிட்டால், இதயத் துடிப்பு இயல்பை விடவும் அதிகரிக்கும். ஒரு நிமிடத்திற்கு, 60 - 100 இதயத் துடிப்புகள் இயல்பானது. எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலே சிலருக்கு 100க்கு மேல் துடிக்கும். இவர்கள் மாரத்தான் ஓடினால், 180, 200 என்று போகும். தவிர, இதயத் தசைகள், சுருங்கி விரியும் போது, இதயத்திற்கும், மற்ற உடல் உறுப்புகளுக்கும் தேவையான ரத்தம், இதயத்தின் உள்ளே இருக்காது.காரணம், இயல்பாக இருக்கும் தசை தடிமனுக்கு ஏற்ப நுண்ணிய ரத்தக் குழாய்கள் தேவைக்கு ஏற்ப ரத்தத்தை வினியோகிக்கும். வேகமாக ஓடும் போது, இதயத் தசைகள் ஓரளவிற்கு மேல் சுருங்காது. ரத்த ஓட்டம் இல்லாமல், மூளை, சிறுநீரகங்கள். முதலில் பாதிக்கப்படும்.மயக்கம் வந்து கீழே விழுந்து விடுவர். இதயத்திற்கு சிறிது நேரம் ஓய்வு தந்தால் மட்டுமே இயல்பாக ரத்தம் வெளியேறும். இதயத்தின் தசைகள் சுருங்கி விரியும் தன்மை தான் அதனுடைய திறனை காட்டுகிறது. இதய அறைகளின் செயல்பாட்டை பொருத்தே தசைகளின் தடிமன் இருக்கும்.இதயத்தின் கீழ் அறை, ரத்த அழுத்தத்தை தானே இயக்கி விசையாக மாற்றி, ரத்தத்தை உடல் முழுதும் செலுத்துகிறது. இந்த தசைகள், கடினமான வேலை செய்வதால், தசைகளின் தடிமன் அதிகபட்சம் 9 மி.மீ., இருப்பது தான் இயல்பு. வலது பக்க அறையும், மேல் இதய அறையின் தசைகளும் 3 - 4 மி.மீ., தடிமன் இருக்க வேண்டும்.வலது பக்க அறையில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் செல்வதால், அதன் நடுவில் வால்வு உள்ளது. அதில் சுருக்கம் ஏற்பட்டால், 4 மி.மீ., தடிமன் 9 மி.மீ.,ஆக அதிகரித்து விடும். தடகள வீரர்கள் உட்பட கடினமான பயிற்சி செய்பவர்களுக்கு, இதயத் தசைகள் தடிக்கும். இதனால், எதிர்பாராத சமயங்களில் மயக்கம் வரும்.உடல் தகுதி, இதய ஆரோக்கியம் பற்றி தெரியாமலேயே எல்லாரும் சென்று மாரத்தானில் கலந்து கொள்கின்றனர். எனக்கு இது பிடிப்பதேயில்லை. பிறவியிலேயே வால்வு சுருங்கி இருந்தால், ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. 20 வயதிற்கு மேல், தடகள விளையாட்டு, ஜிம்னாஸ்டிக், நடனம் என்று ஆடும் போது, மயங்கி விடுகின்றனர்.நடை பயிற்சி தான் இதயத்தை சீரான நிலைக்கு கொண்டு வரும்.இதயத் தசைகள், இதயம், நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று குடும்பத்தில் யாருக்காவது சுவாசக் கோளாறுகள் இருந்தால் நமக்கும் வரலாம். உடற்பயிற்சி ஆஸ்துமா என்றே ஒன்று உள்ளது. இயல்பாக இருப்பர்; வேகமாக ஓடும் போது மூச்சு இரைக்கும். இதய செயல் திறனை கண்டறிய, 'டிரெட் மில், ஈசிஜி' எடுத்தால் தெரிந்து விடும்.ரத்த நாளங்கள், இதய அறைகள் நன்றாக இருக்கிறதா என்று உறுதி செய்த பின் ஓடலாம்.ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓடும் போது, காற்றே சரியாக இருக்காது. சில நேரங்களில் நிலத்தில் இருந்தும், பல நேரங்களில் கடலில் இருந்தும் காற்று வீசும். கடற்கரையில் மாரத்தான் ஓடுகின்றனர். ஈரப்பதம் அதிகம உள்ள கடற்கரை காற்றில் ஆக்ஸ்சிஜன் குறைவாக இருக்கும்.டாக்டர் எஸ்.தணிகாசலம்,இதய நோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம், சென்னை044 - 4592 8631, 98400 48269thanikachalam@sriramachandra.edu.in