ஓடுவேன்... ஓடுவேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்!
சென்னை மாநகராட்சி மேயராக, தனி முத்திரை பதித்தவர், மா.சு., என்று பொதுவாக அழைக்கப்படும், தி.மு.க., கட்சியைச் சேர்ந்த, மா.சுப்ரமணியன், 61. சைதாப்பேட்டை, எம்.எல்.ஏ.,வாக பொறுப்பு வகிக்கிறார்.ஒரு அரசியல்வாதியாக அவரைப் பற்றி, பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஈடுபாடு, எந்த நிலையிலும் உடற்பயிற்சியில் சமரசம் செய்து கொள்ளாத பிடிவாதம் என, மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராக, உலக சாதனை படைத்திருக்கும், மா.சு.,வின் இன்னொரு முகம், பலரும் அறியாதது.அதிலும், 50 வயதிற்கு மேல், இந்தச் சாதனையை செய்திருக்கிறார். உடல் தகுதி, ஆரோக்கியம் குறித்து, அவர் பகிர்ந்து கொண்டதில் இருந்து...சிறிய வயதிலிருந்தே, படிப்பில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை; விளையாட்டு பிடிக்கும். 1995ம் ஆண்டு, எனக்கு சர்க்கரை கோளாறு இருப்பது தெரிந்ததும், வாழ்க்கையே இருண்டு போன மாதிரி தோன்றியது.தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறியதால், தவறாமல் நடப்பேன். 2004, அக்., 17ம் தேதி, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்ததற்காக, அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மதுரையில் பாராட்டு விழாவை, கவிஞர் வைரமுத்து நடத்தினார்.அதில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து நண்பர்களுடன், காரில் சென்றேன். பெரம்பலுாரை தாண்டி, நாரயணமங்கலம் என்ற ஊரைத் கடந்த போது, நாங்கள் பயணித்த காரும், எதிரில் வந்த கன்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில், என்னுடன் பயணித்த, மாநகராட்சி உறுப்பினர் ஜம்புலிங்கம், சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். காரின் முன்சீட்டில் அமர்ந்து பயணம் செய்த எனக்கு, வலது கால் மூட்டு, ஆறேழு துண்டுகளாக நொறுங்கி விட்டது. தலையில் பலத்த அடி.மதுரை நிகழ்ச்சிக்காக அங்கிருந்த, தற்போதைய தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆலோசனையில், திருச்சியில் உள்ள, காவேரி மருத்துவ மையத்தில் சேர்த்தனர். தலையில் அடிபட்டதால், முதல் ஐந்தாறு நாட்கள், சுய நினைவில்லாமல் இருந்தேன்; அவசர சிகிச்சைப் பிரிவில், 15 நாட்கள் சிகிச்சை பெற்றேன்.முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்கு பின், சென்னைக்கு கொண்டு போகலாம் என்று முடிவு செய்து, ஆம்புலன்சில், ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, ரயிலில் அழைத்து வரப்பட்டு, சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ச்சியாக, மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றேன்.திருச்சியில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், 'வாழ்க்கை முழுவதும் உங்களால், இனி ஓடவே முடியாது' என்று சொன்னார்கள். அந்த சமயத்தில், நான் ஓட்டப் பந்தய வீரன் இல்லை. பின், ஏன் அந்த வார்த்தையை சொன்னார்கள் என்று புரியவில்லை. அத்துடன், என்னால், தரையில் சம்மனம் போட்டு உட்கார முடியாது என்று, கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார்கள்.சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் வீட்டின் அருகில் வசிக்கும் யோகா பயிற்சியாளர் பாஸ்கர் உதவியுடன், பயிற்சிகளை ஆரம்பித்தேன். தரையில் உட்காரவே முடியாது என்ற நிலையில், ஓராண்டு யோகா பயிற்சியில், பத்மாசனம் போட்டு உட்கார ஆரம்பித்து விட்டேன்.அதன்பின், தினமும் நடைப் பயிற்சி செய்தேன். 2000ம் ஆண்டின் மத்தியில், மெதுவாக ஓட ஆரம்பித்தேன். தினமும், 1 கிலோ மீட்டர் என்று தொடங்கிய ஓட்டம், 5, 6 கிலோ மீட்டர் என்று அதிகரித்து, 10 கி.மீ., ஓடினேன்.கடந்த, 2014, பிப்ரவரியில், புதுச்சேரி ஆரோவில் சார்பாக, மாரத்தான் ஓட்டம் அறிவித்தது தெரிந்து, என் நண்பர்கள், 10 பேருடன் பங்கேற்றேன். அப்போது, என் வயது 54.அந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், 21 கி.மீ., துாரத்தை கடக்க, மூன்றேகால் மணி நேரம் ஆனது. 'இனி ஓடவே முடியாது' என்று கூறப்பட்ட நான், 2 மணி நேரம், 34 நிமிடத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்தேன். அன்று என் மனதில் தோன்றிய உணர்வு, 'என்னால் ஓட முடியும்!'அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, மும்பை என்று, 25 மாரத்தான் ஓட்டங்களில் ஓடினேன். போட்டி எங்கு நடக்கிறது என்று, தேடித் தேடி ஓடினேன். மாரத்தான் பற்றிய தகவல்களை இணையதளத்தில் தேடியபோது, 50 வயதிற்கு மேல், இரண்டு ஆண்டுகளில், தேசிய அளவில், 25 மாரத்தான் ஓட்டம், யாரும் ஓடியதில்லை என்று தெரிந்தது.அதிலும், மூட்டு அறுவை சிகிச்சை செய்த, சர்க்கரை கோளாறு உள்ள ஒருவர் இதை செய்ததில்லை. என் சாதனை, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டில்' பதிவானது. அதன்பின், 29 மாரத்தான் ஓடி, 'ஏசியா புக் ஆப் ரெக்கார்டில்' இடம் பெற்றேன்.இரண்டு ஆண்டுகளில், 25 மாரத்தான் ஓட்டம் என்பதை, ஓராண்டில் செய்ய வேண்டும் என்று ஓடினேன். இதனால், மூன்று ஆண்டுகளில், 50, நான்கு ஆண்டுகளில், 75, ஐந்து ஆண்டுகளில், 100 மாரத்தான் ஓட்டங்கள் ஓடி, உலக சாதனை செய்து, 'வேர்ல்டு ரெக்கார்ட் யூனியன்' அமைப்பில் இருந்து, இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் விருது வாங்கினேன்.'வேர்ல்டு ரெக்காட்ஸ் யுனிவர்சிட்டி' என்ற அமைப்பு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 'வேர்ல்டு டாப் கிங்க்ஸ்' என்ற சாதனை புத்தகத்திலும், என் பெயர் இடம் பெற்றுள்ளது.கடந்த, 2014 - 2019 பிப்ரவரி வரை, ஐந்து ஆண்டுகளில், 100 முடித்து விட்டேன். அதன்பின், லண்டன், ஆஸ்திரியா, கத்தார், நார்வே உட்பட, 11 நாடுகளில், 11 மாரத்தான் ஓடியுள்ளேன். இந்தியாவில், லடாக் உட்பட, 31 மாநிலங்களில், 20 மாநிலங்களில் ஓடியுள்ளேன்.