பல்லோடு வாழ்ந்தால் பல்லாண்டு சிரிக்கலாம்!
பற்களை சுற்றி உண்டாக கூடிய நுண்ணுயிர் கிருமிகள், பல்லைத் தாங்கி நிற்கும் தசைகளில் நோயை பரப்புவதால், நோயை எதிர்க்கும் செயல், நம் உடலில் அளவுக்கு அதிகமாக நடைபெற தூண்டப்படுகிறது. 'பல்லோடு வாழ்க' - இது, சில ஆண்டுகளுக்கு முன், நாங்கள் இந்தியா வந்திருந்த போது, ஒரு பிறந்த நாள் விழாவில் கூறிய வாழ்த்துகள். இதைக் கேட்டு, சுற்றியிருந்த பலரும் சிரித்தனர், பிறந்த நாள் கொண்டாடியவரையும் சேர்த்து!நான், ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும், உபதேசிக்கும் வார்த்தைகள், 'பற்களின் பராமரிப்பு' வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வகிக்க வேண்டும் என்பதே.சர்க்கரை மற்றும் சில உணவு வகைகளாலும், நாம் பற்களை பராமரிக்க தவறுவதாலும் வரும் விளைவு, பற்சிதைவு. பற்களில் குழி விழுதலும், ஒரு வகையான பற்சிதைவே. பள்ளி செல்லும் சிறுவர்களில், 92 சதவீதம் மாணவர்களுக்கு, பற்குழிவு இருப்பது, மத்திய அரசு நடத்திய ஆராய்ச்சியில், சமீபத்தில் தெரிய வந்துள்ளது.வாயும், உடம்பும்'பல் போனால், சொல் போச்சு' என்பது, பழமொழி. இதையும் விட, பற்களின் ஆரோக்கியமின்மை, நம் முழு உடலையும் பாதிக்கக் கூடும். பற்களை சுற்றி உண்டாக கூடிய நுண்ணுயிர் கிருமிகள், பல்லைத் தாங்கி நிற்கும் தசைகளில் தொற்றுநோயை பரப்புவதால், நோயை எதிர்க்கும் செயல், நம் உடலில் அளவுக்கு அதிகமாக நடைபெற தூண்டப்படுகிறது. அந்த கிருமிகளை அழிப்பதற்கு உடல் தயாராவதால், பல் தசைகளில் கிளர்ச்சி ஊட்டம் ஏற்படுகிறது. சில நாட்களுக்கு பின், இந்த கிளர்ச்சி ஊட்டம், அதனால் ஏற்படும் ரசாயன சுரப்பு ஆகியவை, பற்தசைகளையும், பற்களுக்கு அடியிலுள்ள எலும்பமைப்புகளையும் சிதைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.வாய் ஆரோக்கியமின்மையால், நீரிழிவு நோய், இதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகின்றன.பல் தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு குறை பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறத்தல் ஆகியவையும் ஏற்படுகின்றன.பல் நோயை தடுப்பது எப்படி?பல் மற்றும் அதைத் தாங்கி நிற்கும் தசையில் ஏற்படும் நோயைத் தடுக்க, இரண்டு முக்கிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.* ஆண்டுக்கு இரண்டு முறை, பல் மருத்துவரிடம் சென்று, பற்களை சுத்தப்படுத்துவது. இதை, சிறு வயது முதலே ஆரம்பிக்க வேண்டும். இப்படி பராமரித்தால், பற்காரை நீங்குதல், பற்குழிகள் அகற்றுதல், ஈறு நீக்க நோயிலிருந்து மீளுதல் ஆகியவை கைவசப்படும். முக்கியமாக, பற்காரைகளை அகற்றுவது மிகவும் முக்கியம். அந்த நேரத்திலேயே, பற்குழிகளை அடைத்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ளலாம்.* அடுத்ததாக, மூன்று ஆண்டிற்கு ஒருமுறை, வாய் அமைப்பை எக்ஸ்-ரே எடுத்து, அதன் மூலம், பற்கள், தாடை எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இந்த ஆய்வில் ஏதாவது பிரச்னைகள் வெளிப்பட்டால், பல் புறத்திசு சிகிச்சை நிபுணரிடம் செல்ல வேண்டும்.* தினமும், இரண்டு முதல், மூன்று முறை வரை, பல் துலக்க வேண்டும். அதற்கு, மென்மையான பல் தூரிகைகளை மட்டுமே, உபயோகிக்க வேண்டும்.* ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னும், உடனே, வாயை கொப்பளிக்க வேண்டும். சர்க்கரை சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டவுடன், இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். இது போன்ற உணவு வகைகளை, முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.* பல் தூரிகைகளை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.* அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில், ஒவ்வொரு குடிமகனுக்கும், எல்லா வகையான காப்பீடுகளும் (லைப் இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ், டென்டல் இன்சூரன்ஸ், பிராப்பர்டி இன்சூரன்ஸ்) அவர்கள் வாழ்க்கையில், முக்கிய பங்கு வகிக்கின்றன.ஆனால், இந்தியாவில், பற்காப்பீடு இருப்பது, பெறுவது, வழக்கமான நடைமுறையாகத் தெரியவில்லை. உடல்நலக் காப்பீடுகள், பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளை, சேர்த்துக் கொள்வதில்லை. வெகு சில நிறுவனங்களே, இந்த வகையான நிபந்தனைகளை வைத்து, காப்பீடு தருவதாக தெரிய வருகிறது.சுத்தமான பற்களால், காதல் வாழ்க்கையும், தாம்பத்திய வாழ்க்கையும், சுகமாகவும், மனநிறைவு கொண்டதாகவும் இருப்பது சாத்தியம்.நான் பல் மருத்துவனோ, பற்காப்புறுதி தரும் நிறுவனத்திற்கு பணியாற்றுபவனோ அல்ல. நம் நாட்டில், மிக நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும், என்னை வியக்க வைத்த, மற்ற எந்த நாட்டிலும் இல்லாத ஒரு தனிசிறப்பு, அமெரிக்க மக்களின் ஆரோக்கியமானப் பற்களிலும், அவர்கள் அதைப் பாதுகாக்க எடுத்துக் கொள்ளும் உன்னத முயற்சியிலும் பார்க்க முடிகிறது.பற்களைக் காப்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்!மணி லட்சுமிநாராயணன், பெனிசில்வேனியா, யு.எஸ்.ஏ.,