ஏசி அறையில் படுத்தால்....
நான், என் கணவர், இரண்டு குழந்தைகளுடன் 'ஏசி' வசதியுள்ள அறையில் துாங்குவோம். 'ஏசி' வசதி செய்து ஐந்தாண்டுகள் ஆகிறது. சமீப காலமாக எங்கள் நால்வருக்கும் இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது எதனால்?'ஏசி' 'ஏர்கூலர்' போன்றவை சிலருக்கு நுரையீரலில் மூச்சு விடும் பாதையில் அலர்ஜி பிரச்னைகளை ஏற்படுத்தலாம். 'ஏசி'யில் படர்ந்திருக்கும் பூஞ்சை குளிர் காற்றுடன் சேர்ந்து நுரையீரலில் 'Hyper semility Nuemotitis' என்ற பாதிப்பை உருவாக்கும். 'ஏசி'யை முறையாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். பிரச்னை தொடர்ந்தால் 'ஏசி'யை தவிர்ப்பது நல்லது.என் அப்பாவிற்கு அவசர சிகிச்சை பிரிவில் வாய் வழியாக 'வென்டிலேட்டர்' என்ற செயற்கை சுவாசக் கருவியை பொருத்தி இருந்தார்கள். இப்போது தொண்டையில் ஓட்டை போட வேண்டும் என்கிறார்கள்.ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தன்னால் இயல்பாக மூச்சு விட முடியாத சூழ்நிலையில் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக் கருவியை பொருத்துவார்கள். அது வாய் வழியாகவோ அல்லது மூக்கு வழியாகவோ பொருத்தப்படும். அதை அதிகபட்சமாக பத்து நாட்கள் வரை வைத்திருக்க முடியும். அதற்குள் சரியாகி விட்டால் வெண்டிலேட்டர் கருவியை எடுத்து விடுவார்கள். பத்து நாட்களுக்கு பிறகும் கருவி பொருத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் தொண்டையில் ஓட்டை போட்டு, அதன் வழியாக கருவியை பொருத்துவார்கள். எனவே தொண்டையில் ஓட்டை போட வேண்டும், என கூறியிருக்கிறார்கள்.என் பாட்டி சத்தான உணவு அசைவத்தில் தான் உள்ளது. அதை நிறைய சாப்பிட வேண்டும், என கூறுகிறார். நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு சைவம், அசைவ உணவில் எதை சாப்பிடுவது நல்லது?நிறைய பேர் அசைவ உணவில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என கருதுகிறார்கள். செரிமானம் நன்றாக செயல்பட சைவ உணவுகளே சிறந்தது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நமக்கு தருகிறது. அதிகளவில் புரதச்சத்து தேவைப்படுபவர்கள், அசைவ உணவு வகைகளை எடுத்து கொள்ளலாம். அதையும் அளவோடு வாரம், மாதம் ஒரு முறை எடுத்து கொள்ளலாம். அதிலும் ஆட்டிறைச்சியை தவிர்த்து கோழி, மீன் உணவுகளை எடுத்து கொள்ளலாம். நான் தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்வது வழக்கம். எனக்கு ஆஸ்துமா உள்ளது. குளிர்காலத்தில் நடை பயிற்சி செய்யலாமா?நடை பயிற்சியை தினமும் மேற்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். குளிர் காலத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் நடை பயிற்சி செய்வதால் மூச்சு விடுவதில் சிரமம், இளைப்பு, இருமல் போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். எனவே நடை பயிற்சியை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.- மா. பழனியப்பன் நுரையீரல் சிறப்பு நிபுணர் மதுரை, அலைபேசி: 94425 24147