உள்ளூர் செய்திகள்

புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு

எனக்கு ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 154 மி.கி., ஆக இருந்தது. இதற்காக 'அட்டோர்வா ஸ்டேட்டின்' மாத்திரை எடுத்து வந்தேன். தற்போது எல்.டி. எல்., அளவு 82 மி.கி.,யாக உள்ளது. டாக்டர் நான் எடுத்த மாத்திரையை நிறுத்திவிட்டு, வாழ்க்கை முறை மாற்றமே போதுமானது என்கிறார். இது சரியா? பி. ராமச்சந்திரன், மதுரைL.D.L., என்பது, Low Density Lipoprotein என்பதன் சுருக்கம். எல்.டி.எல்., என்பது நம் ரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பு. இது மாரடைப்பு, பக்கவாதம் வராமல் இருக்க, இது அவசியம் நம் ரத்தத்தில் 100 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். ஒருமுறை பாதிப்பு வந்தவருக்கு, மறுபடியும் அவை வராமல் இருக்க, 70 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். ஸ்டேட்டின் வகை மாத்திரைகள், இருதய நோய், பக்கவாதம் போன்ற ரத்தநாள நோய்களை தடுக்கும் சிறந்த ஆயுதம் போன்றவை. இம்மருந்து இருதய வைத்தியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இம்மருந்தை எடுப்பதன் மூலம், பெருமளவு ரத்தநாள நோய்களை தடுத்துவிடலாம். ஒருவரது இருதயத்தைச் சுற்றி கட்டப்படும் பாதுகாப்புச் சுவர் போன்றது இம்மருந்து. இதன் பக்கவிளைவுகள் மிகமிக குறைவு. ஆனால் ஸ்டேட்டின் வகை மாத்திரைகளை எடுக்கத் துவங்கினால், ஒரு போதும் நிறுத்த முடியாது. ரத்தத்தில் எல்.டி. எல்.,ன் அளவுக்கு ஏற்ப, மருந்தை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாமே தவிர, இதை வாழ்நாள் முழுவதும் எடுத்தாக வேண்டும். நீங்கள் எல்.டி.எல்., குறைந்ததும் ஸ்டேட்டின் மாத்திரையை நிறுத்தியது தவறு. இம்மருந்தை உடனடியாக மீண்டும் துவங்கி, உங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றினால், நீண்ட காலம் பிரச்னை இன்றி வாழலாம்.எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. இதற்காக தற்போது, 'ஆஸ்பிரின், ரேமிபிரில் அட்டோர்வா ஸ்டேட்டின்' (Aspirin, Ramipril, Atorva Statin) மாத்திரைகளை எடுத்து வருகிறேன். 2 மாதங்களாக, சளி இன்றி, வறட்டு இருமலாக வந்து கொண்டிருக்கிறது. இதற்காக நுரையீரல் சி.டி.,ஸ்கேன் எடுத்தும், குறைந்தபாடில்லை. நான் என்ன செய்வது? பி. ஞானசேகர், விருதுநகர்உங்களுக்கு ஏற்பட்டு உள்ள வறட்டு இருமலுக்கு காரணம் நோய் அல்ல; மருந்துதான். ரேமிபிரில் என்ற மருந்தால் மிகச்சிலருக்கு வறட்டு இருமல் வரவாய்ப்பு உள்ளது. எனவே இம்மருந்தை உடனடியாக நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக வேறு மாத்திரையை எடுத்தால், இருமல் சில வாரங்களில் முழுமையாக நின்றுவிடும். ரேமிபிரில் என்பது இருதய சிகிச்சையில் மிகச்சிறந்த மருந்து ஆகும். இம்மருந்து மிகச் சிலருக்கே இப்படி இருமல் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது. எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 9 மாதங்களாகிறது. புகைப்பழக்கத்தை நிறுத்தியிருந்த நான், தற்போது மறுபடியும் அப்பழக்கத்தை துவக்கிவிட்டேன். இதனால் பாதிப்பு வருமா? கே. சுந்தரமூர்த்தி, திண்டுக்கல்புகை பிடிக்கும் பழக்கம் என்பது மனிதனின் உடல் உறுப்புகளை கொடூரமாக பாதிக்கக் கூடியது. இதில் முக்கியமானவை புற்றுநோயும், மாரடைப்பும்தான். ஒரு இருதய நோயாளி புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், அவருடைய இருதயத்திற்கு கிடைக்கக் கூடிய பலன், பைபாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி போன்ற சிகிச்சைகளைவிட மேலானதாகும். எனவே நீங்கள் மறுபடியும் புகைபிடிக்கும் பழக்கத்தை துவங்கியது, உங்கள் இருதயத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதனால் புதிதாக பொருத்தப்பட்ட ரத்தக்குழாயில் அடைப்பு வரவும், பழைய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பணம் செலவு செய்து நோயை, 'வா... வா...' என்று அழைப்பது, புகைப்பழக்கத்திற்குத்தான் பொருந்தும். எனவே உடனடியாக இப்பழக்கத்தை நிறுத்துவதே சரியானதாக இருக்கும்.- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்