உள்ளூர் செய்திகள்

குழந்தைகளின் மனநல பிரச்னைகள் அதிகரிப்பு: காரணத்தை விவரிக்கின்றனர் மனநல மருத்துவர்கள்

கோவை: குழந்தைகள் என்றாலே குறும்புத்தனம், விளையாட்டு என இருக்க வேண்டிய பருவத்தில், பல குழந்தைகள் மனநலம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்.படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, வாசிப்பதில் சிரமம், அதிக பிடிவாதம், கோபம், பள்ளிக்குச் செல்ல பயம் எனப் பல காரணங்களுக்காக பெற்றோர் குழந்தைகளை தங்களிடம் அழைத்து வருவதாக கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள்.குறிப்பாக, ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் கற்றல் குறைபாடுகள், கவனச்சிதறல் மற்றும் பெற்றோரைப் பிரிந்து இருக்க முடியாத பதற்றம் போன்றவை இன்று அதிகம் கவனிக்கப்படுகின்றன.முதலாம், இரண்டாம் வகுப்பு படிக்கும் சில குழந்தைகளுக்கு வாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நன்றாகப் பேசுவது, மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது என அறிவுத்திறன் இருந்தாலும், புத்தகத்தை வாசிக்கும்போது எழுத்துகளை விட்டுவிடுவது, சொற்களை மாற்றிப் படிப்பது போன்ற பிரச்னைகள் காணப்படுவதாக சொல்கின்றனர் ஆசிரியர்கள்.இது 'டிஸ்லெக்சியா' எனப்படும் வாசிப்புக் குறைபாடாக இருக்கலாம். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல் செய்வதில் சிரமம், எழுதும்போது எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் ஏற்படுவதும் கண்டறியப்படுகின்றன.அதேபோல், ஓரிடத்தில் அமர்ந்து படிக்காமல் அடிக்கடி எழுந்து செல்வது, சொல்வதைக் கவனிக்காமல் இருப்பது, பொருட்களைத் தூக்கி எறிவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது போன்றவை ஏ.டி.எச்.டி. எனப்படும் கவனக்குறைவு மற்றும் அதீத சுறுசுறுப்பு குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.படிப்புப் பிரச்னைகளைத் தாண்டி, சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுக்கின்றனர். காலையில் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி என பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.பெற்றோரைப் பிரிந்து புதிய சூழலுக்குச் செல்ல முடியாமல் தவிப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். இது பிரிவுத் துயரப் பதற்றம் எனப்படும் 'செப்பரேஷன் ஆன்சைட்டி' ஆக இருக்கலாம்.குழந்தைகளின் மனநலப் பிரச்னைகளுக்கு மரபியல், உளவியல் மற்றும் சமூகச் சூழல் என மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. குறிப்பாக, பெற்றோர் பிரிந்து வாழ்வது அல்லது குடும்பத்தில் தொடர்ந்து சண்டை ஏற்படுவது போன்ற சூழலில் வளரும் குழந்தைகள் பாதுகாப்பற்ற உணர்வுக்கு ஆளாகின்றனர்.வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் இருப்பதால், பெற்றோரைப் பிரியாமல் அவர்களுடனேயே இருக்க விரும்புகின்றனர்.பள்ளிச் சூழலும் குழந்தைகளின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது, மற்ற குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவது போன்ற செயல்கள் அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையையும் படிப்பில் ஆர்வமின்மையையும் ஏற்படுத்தலாம்.அதேபோல், குழந்தைகளை அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்ப்பதும், எப்போதும் பெற்றோரின் கண்காணிப்பிலேயே வைத்திருப்பதும் தனியாகச் செயல்படும் தைரியத்தைக் குறைக்கலாம்.பெற்றோர் வேலைக்குச் செல்வது, வேலை காரணமாக குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிட முடியாமல் இருப்பது போன்றவையும் குழந்தைகளுக்குத் தேவையான அன்பும் கவனிப்பும் கிடைப்பதில் இடைவெளியை ஏற்படுத்துகின்றன.குழந்தைகளின் வளர்ச்சியில் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான பருவத்தில் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவசியம். சத்தான உணவு, சுகாதாரம், பாதுகாப்பான குடும்பச் சூழல் ஆகியவற்றுடன் குழந்தைகளுக்கு உரிய நேரமும் கவனிப்பும் வழங்க வேண்டும்.குழந்தை வளர்ப்பில் கனிவு, கண்டிப்பு இரண்டும் இருக்க வேண்டும். இளம் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று சொல்லி முடித்தார் மனநல மருத்துவர் மோனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்