சொல்லத் தெரியாமல் தவிக்கும் குழந்தைகள்!
தற்போது உள்ள சூழலில், பல குழந்தைகளுக்கு மனப் பிரச்னைகள் உள்ளன; பிரச்னையின் தன்மை மட்டுமே மாறுபடுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்குச் சென்று, மன நலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினால், ஒவ்வொரு குழந்தையும் வெளியில் சொல்லத் தயங்கும் ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கி இருப்பது புரியும்.குழந்தைகள், தங்களின் பிரச்னைகளை பேசுவதற்கு நம்பிக்கையான இடம் வேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம். பிரச்னைகளை குழந்தைகள் சொல்லும் போது, கேட்பவர் அதை சரியான கோணத்தில் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டியது முக்கியம்.எங்களின் 'ஸ்கார்ப்' அமைப்பு, மன நல சிகிச்சை மையம் என்பதால், அங்கு வருவதற்கு குழந்தைகள் தயங்குகின்றனர். 'மன நோய் சிகிச்சை மையத்திற்கு, ஆலோசனைக்கு அனுப்பினால், குழந்தைக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என வெளியில் தெரிந்து விடுமே...' என்று பெற்றோர் பயப்படுகின்றனர். அதனால் தான், ஸ்கார்ப் வளாகத்தில் இல்லாமல், சென்னை ஆயிரம் விளக்கு, தபால் நிலையம் எதிரில், ஒரு ஆலோசனை மையத்தை ஆரம்பித்துள்ளோம். குழந்தைகளுக்கு பலவிதமான குழப்பங்கள் உள்ளன. குறிப்பாக, உறவினர்கள், நட்பு வட்டாரங்கள், பெற்றோருடன், குழந்தைகளுக்கு உறவுப் பிரச்னை இருக்கிறது.'ஸ்கிரீன் அடிக் ஷன்' எனப்படும், 'மொபைல் போன், லேப்டாப்'பில் அடிமையாக இருப்பதும், அதிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிப்பதும் தெரிகிறது. வளர் இளம் பருவத்தில், குழந்தைகளின் பிரச்னைகளை பெற்றோர் புரிந்து கொள்ளாததால், தற்கொலை எண்ணங்கள், மன அழுத்தம், மனப் பதற்றம் போன்றவை குழந்தைகளிடம் அதிக அளவில் இருக்கிறது.இது போன்ற மன நலப் பிரச்னைகள் உள்ள குழந்தைகள், தங்கள் பிரச்னைகள் குறித்து, எங்கே, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.