மறப்பது முதுமையின் இயல்பா?
'சாவியை எங்கே வைத்தேன்' என்று என் அம்மா அடிக்கடி மறந்து விடுவார். வயதாயிடுச்சி இல்லே, எதை, எங்கே வைத்தோம் என்று மறப்பது இயல்பு தானே என்பார் என் அப்பா. பல வீடுகளில் இயல்பாக நடக்கும் உரையாடல் தான் இது. வயதாவதால் ஏற்படும் இயல்பான மாற்றம் என்று நாம் நினைக்கும் மறதி, நடத்தையில் மாற்றம், ஒரு விஷயத்தை நினைவுபடுத்திச் சொல்ல தடுமாறுவது, குழப்பம் ஆகியவை பல சமயங்களில், டிமென்ஷியா எனப்படும் மறதி நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முதியவர்களிடம் பொதுவாக காணப்படும் மறதி நோய், பெரும்பாலும் அடையாளம் காணப்படாமலேயே உள்ளது. டிமென்ஷியா என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. இது நினைவாற்றல், சிந்தனை, நடத்தை மற்றும் தினசரி செயல்பாடுகளின் திறனை பாதிக்கும் பலவித பிரச்னைகளின் நோய் தொகுப்பு. வயது ஒரு காரணியாக இருந்தாலும், டிமென்ஷியா தவிர்க்க முடியாத பிரச்னை இல்லை. முதியவர்கள், அவர்களை கவனித்து கொள்பவர்களிடம் நான் பேசும் போது, சமீபத்திய உரையாடல்களை மறப்பது, அன்றாட பொருட்களை தவற விடுவது, கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்பது, பழக்கமான வழக்கங்களை பின்பற்றுவதில் சிரமப்படுவது, நன்கு அறிமுகமான இடங்களில் குழப்பமடைவது போன்றவை, வயது தொடர்பான, பாதிப்பில்லாத இயல்பான விஷயமாகவே நினைக்கின்றனர். இதனால், பிரச்னை தீவிரமான பின்பே மறதி நோய் என்பது புரிகிறது. மறதி நோய் என்பது, நினைவாற்றல் இழப்பை தாண்டி, நோயாளி மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தினசரி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. ஆரோக்கியமான முதியவர்களை பராமரிப்பதை காட்டிலும், மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பவர்கள், மனச்சோர்வு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். என்னிடம் பேசும் போது, மறதி எப்போது எங்களுக்கு பிரச்னையாக மாறியது என்பதே தெரிய வில்லை, என்று தான் குடும்ப உறுப்பினர்கள் கூறுவர். எப்போதாவது பெயர்களை மறப்பது அல்லது பொருட்களை தவற விடுவது முதுமையின் ஒரு இயல்பான பகுதியாக இருக்கலாம் என்றாலும், அன்றாட வாழ்க்கையில் கு றுக்கிடும் தொடர்ச்சியான நினைவாற்றல் பிரச்னைகளை அலட்சியம் செய்வது கூடாது. மறதி நோய்களுக்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிவதால், அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும். நினைவாற்றல் பிரச்னைகள் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவ உதவியை நாடுவது என்பது, மனநல மருத்துவரா க எனக்கு வருத்தம் அளிக்கிறது. டாக்டர் நிவேதா பத்மநாதன், மனநல மருத்துவர், அதுல்யா சீனியர் கேர், சென்னை 82204 59995 nivetha2008@gmail.com