உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டு வேலை தான் கவுரவமா?

'இந்திய இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கொட்டி கிடக்கிறது' என்பதுதான், இன்றைய கல்வியாளர்கள், வேலைவாய்ப்பு நிபுணர்கள் சொல்லும் தத்துவம். இந்தியாவில் வேலை வாய்ப்பே இல்லையா? வெளிநாட்டில் படிப்பவர்களும், வேலை செய்பவர்களும் தான் மேதையா? பெற்றோருக்கும், 'என் பிள்ளை பாரின்ல இருக்கான்' என்று சொல்வதில் ஏன் எத்தனை ஆர்வம்? பெற்றோரை விட்டு, நாட்டை விட்டு, கலாசாரத்தை விட்டு பிரிந்து வாழ்வதில் அத்தனை சந்தோஷமா? 'வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிம்மதி தருமா?' அம்மாடி... நிறைய கேள்விகள் கேட்டு விட்டோம். மதுரை லேடிடோக் கல்லூரி மாணவியரிடம். கொஞ்சமும் சளைக்காமல் பதிலளித்தனர்.

* அபிதா ஏஞ்சல்: கல்லூரியில் நன்றாக படித்தால், வளாக நேர்முகத் தேர்விலேயே வெற்றி பெற்று, நல்ல வேலையில் அமரலாம். இதற்கு வெளிநாடு தேவையில்லை. வெளிநாட்டில் தற்போது, நிரந்தர வேலை என்பது கனவாகி வருகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளையை தேர்வு செய்வதற்கு முன், நன்கு யோசிக்க வேண்டும்.

* ரம்யா: இப்போ பசங்களும், பொண்ணுங்களும் வெளிநாட்டில் வேலை பார்ப்பதை, பேஷனா நினைக்கறாங்க. முதலில் சந்தோஷமாக நினைக்கும் பெற்றோர், வயதான காலத்தில் தான் பிள்ளையை பார்க்க முடியாமல், வருத்தப்படுகின்றனர். அங்க போய் லட்ச லட்சமா சம்பாதிச்சாலும் அங்குள்ள செலவுக்கு சரியாகத் தான் வரும். இதில் பெருமை ஒன்றுமில்லை.

* ஆனெட் ஜான்சன்: அந்தஸ்து மோகம் காரணமாக தான் பெற்றோர், பிள்ளையை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புகின்றனர். அதற்கேற்ப வரதட்சணையும் எதிர்பார்க்கின்றனர். பெண், நல்ல வசதியாக வாழவேண்டும் என பெற்றோர் நினைக்கின்றனரே தவிர, நல்லவனோடு வாழ வேண்டும் என்பதை சிந்திப்பதில்லை.

* குஷ்பூ மேத்தா: இந்தியாவில், விடுமுறையில் கூட குழந்தைகளுடன் பெற்றோர் சந்தோஷமாக இருக்க முடியாது. வெளிநாட்டில் சனி, ஞாயிறு விடுமுறை. எவ்வித தொல்லையுமின்றி, பிள்ளைகளுடன் ஊர் சுற்றி பார்க்கலாம். பெண்களுக்கும், குழந்தைகளுடன் இரண்டு நாட்கள் முழுமையாக இருப்பது சந்தோஷமாக இருக்கும். நம்ம ஊரில் இதை நினைத்து பார்க்க முடியாது.

* ஜன்னத்துல் பிர்தவுஸ்: அங்கே வாரத்தில் இரண்டு நாட்கள் தான் பெற்றோருடன் பிள்ளைகள் இருக்க முடியும். நம்ம ஊரில் காலையில் வேலை க்குச் சென்றால், மாலையில் வீடு திரும்பலாம். தினமும் பெற்றோரை பார்க்கும் சந்தோஷம், குழந்தைகளுக்கு கிடைக்கும். பிள்ளைகள் கெட்டுப் போவதற்கும் வாய்ப்பில்லை. இதுதானே வரம்.

* மகாலட்சுமி: வெளிநாடு செல்வதற்கு முக்கிய காரணமே, அங்கிருக்கும் பொழுதுபோக்கு, மற்ற அம்சங்கள் தான். சம்பாதிப்பது இரண்டாம் பட்சம் தான். உள்ளூரில் வேலைக்குச் சென்றால், பெற்றோரின் கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். எனவே, திருமணமாகும் வரை, கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவே இளையோர் விரும்புகின்றனர். வெளிநாட்டில் வேலை க்கு செல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

* ஐஸ்வர்யா: இங்கே திருமணத்திற்கு முன் என்ன வேலை பார்த்தோமோ, அதை திருமணத்திற்கு பின்னும் தொடரலாம். ஏனென்றால் வேலை நேரம், பெரும்பாலும் மாலை 6 மணியுடன் முடிந்துவிடும். வெளிநாட்டில் அப்படியில்லை. வேலை நேரத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இதனால் வேலையில் டென்ஷனும், குடும்ப உறவில் விரிசலும் ஏற்படுகிறது. விவாகரத்துகளும் அதிகமாகின்றன.

* நகீனா: வெளிநாடுகளில் 18 வயதுக்கு பின், பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்கின்றனர். இந்தியாவில் அப்படியில்லை. இங்கு வேலை முக்கியமில்லை. குடும்ப உறவுகள் தான் முக்கியமாக கருதப்படுகிறது. அங்கே எவ்வளவு சம்பளம் கிடைக்கிறதோ, அதற்கேற்ப தான் பொருட்களின் விலையும் இருக்கும். இருக்கும் இடத்தில் இருந்தால் தானே நமக்கு மதிப்பும், பெருமையும் கிடைக்கும். எந்த வெளிநாட்டுக் காரர் இந்தியாவில் வேலை பார்ப்பதை பெருமையாக நினைக்கிறார்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !