மூட்டுக்களில் வலியா? அலட்சியம் காட்ட வேண்டாம்!
கை, கால் மூட்டுக்களில் லேசான வலி வந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, நினைக்க வேண்டாம். அலட்சியம் காட்டினால், முடக்குவாதமாகி, எலும்பு மூட்டுக்கள் இணைந்து, சிக்கலான நிலை ஏற்பட்டு விடும்1. முடக்கு வாதம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?கை, கால் மற்றும் விரல்களில் மூட்டுகளில், மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை, கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு தன்மையுடன் கூடிய, 'ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு மூட்டுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதையே, முடக்குவாதம் என்கிறோம்.சிறுவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்று, இந்த பாதிப்பு வருகிறது. இது, எதனால் ஏற்படுகிறது என, உறுதியாக கூற முடியாது. உடலின் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக வரலாம்; பாரம்பரியமாகவும் வரலாம்.2. இதை கண்டறிவது எப்படி? இதில், 'பாசிட்டிவ், நெகட்டிவ்' என்றால் என்ன?ரத்தத்தில், 'ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பாக்டர்' என்ற, ஆர்.ஏ., பரிசோதனை செய்து, பாதிப்பை கண்டறியலாம். இதில், 'பாசிட்டிவ், நெகட்டிவ்' என, இரண்டு வகைகள் உள்ளன. பாசிட்டிவாக இருந்தால், பாதிப்பு அதிகம் என்று அர்த்தம். கை, கால், இடுப்பு மூட்டுகள் முடங்கி, அசைக்க முடியாத நிலை வந்துவிடும். மூட்டு எலும்பு தேய்மானம் அடையும். எலும்பு மூட்டு பாதிப்பால், இணைப்பு எலும்புகள் ஒன்றாகி விடும். எலும்பு இயல்பு நிலையில் இருந்து மாறி, வளைந்து விடும். படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாது. சொந்தமாக வேலை செய்ய முடியாது. ஒரு பொருளை எடுத்து, வேறு இடத்தில் வைக்க முடியாத அளவுக்கு, பாதிப்பு ஏற்படும். சொந்தமாக, எளிதான வேலைகளைச் செய்ய முடியாமல் அவதிப்படுவர். 'நெகட்டிவ்' என்றால், பாதிப்பு குறைவு. குதிகால் வலி, கணுக்கள் வீக்கம், கால், கைகளில் இணைப்புத் திசுக்கள் பாதிப்பு இருக்கும். எலும்பு பாதிப்பு அவ்வளவாக இருக்காது. சிறு மூட்டுக்களில் வலி ஏற்படும். இதை, மருந்து, மாத்திரைகளில் கட்டுப்படுத்த முடியும்.3. வாத நோய்க்கு மருந்தில்லை என, கிராமங்களில் கூறப்படுகிறதே?முடக்குவாத பாதிப்பை தொடர் சிகிச்சைகள் மூலம் சரி செய்ய முடியும். 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, யாரும் நினைக்க வேண்டாம். இதெல்லாம் கட்டுக்கதை. பச்சிலை மருந்துவம், லேகிய மருத்துவம் என, போலி டாக்டர்களிடம் சிக்கிவிடாமல், மூட்டுக்களில் வலி வந்ததுமே, டாக்டர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.4. இதற்கு எந்த மாதிரி சிகிச்சை உள்ளது?இணைப்பு மூட்டு பாதிப்பை ஆரம்ப நிலையில், மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்து விடலாம். இரண்டாம் நிலை என்றால், 'ஸ்டீராய்டு' எனப்படும் ஊசி, மூட்டு இணைப்புக்களில் போடுவதால் வலி, வீக்கம் குறையும்.பாதிப்பு சற்று அதிகமானால், இணைப்பு மூட்டைச் சுற்றியுள்ள, சைனோவியல் திரவத்தை சுரக்கும் தடிமானகி, பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தடிமனான சதைப்பகுதியை அகற்றும் அறுவைச் சிகிச்சை (சைனோ வெக்டமி) செய்யலாம்.5. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது ஏன்?இணைப்பு மூட்டில் உள்ள வலுவலுப்பான சதைப் பகுதி பாதித்து, மூட்டு எலும்புகள் இணைப்பு வளைந்தும், ஒட்டிக் கொண்டும் சிக்கலாகிவிடும். இவர்களுக்கு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதே சிறந்த தீர்வு. கை, கால் மூட்டு, இடுப்பு பந்துக்கிண்ண மூட்டு என, எல்லா மூட்டுக்களையும் மாற்றும் வசதி, பெரிய அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. நிறைய அறுவைச் சிகிச்சைகள் வழக்கமாக செய்யப்பட்டு வருகிறது.6. சிறு வயதினருக்கும் இந்த பாதிப்பு வருகிறதே?சிறு வயதிலேயே மூட்டு பாதிப்பு 'ஜூனைல் ருமாட்டாய்டு ஆர்த்தரேட்டிவ்' எனப்படுகிறது. கை, கால், மூட்டுக்களில் சிறு பாதிப்பு ஏற்படும்போது, முறையான மருத்துவமனைப் பார்த்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் மூட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில், மூட்டு மாற்றும் அளவுக்கு சென்று விடும் என்பதால், கவனமாக இருப்பது நல்லது.7. 'கவுட்டி ஆர்த்தரேட்டிவ்' என்பது இந்த வகையைச் சார்ந்ததா?மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புதான்; ஆனால், முடக்குவாத நோய் அல்ல. 'யூரிக் ஆசிட்' ரத்தத்தில் அதிகமாக இருப்பதால், இந்த பாதிப்பு வரும். கை, கால் பெருவிரல் இணைப்பு மூட்டுக்களில், கணுக்காலில் வீக்கத்தை ஏற்படுத்தும். ரத்தத்தில் 'யூரிக் ஆசிட்' அளவைக் கண்டறிந்து, அதற்கு பிரத்யேக மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். இது குழந்தைகளை பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஆரம்பத்தில் கண்டறிவதால் இந்த பாதிப்பை தடுக்கலாம். கத்திரிக்காய், காபி போன்ற உணவுகளை சாப்பிடுதல் நல்லது.8. மூட்டு பாதிப்பு வராமல் தடுக்க என்ன வழி?பொதுவாக, மூட்டு பாதிப்பே வராது என, கூற முடியாது. பால், பப்பாளி, சோயா பீன்ஸ், இறால் போன்ற கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவை சாப்பிடுவதால், எலும்புகள் ஸ்திரத்தன்மை பெறும். மூட்டு பாதிப்பு வரும்போது, எலும்பு ஸ்ட்ராங்காக இருப்பதால், எளிதில் பெரும் பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.டாக்டர் பி.பாலகிருஷ்ணன்,எலும்பு மூட்டு சிசிச்சை நிபுணர்,அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை.