ஜூன் 5, 2014. ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
ரம்யாவுக்கு, 32 வயது. திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது. 29 வயதிலேயே, 'டைப் 2 டயபடிக்' என்று சொல்லப்படும், இரண்டாம் வகை நீரிழிவு, ரம்யாவுக்கு ஆரம்பமானது. அதற்காக, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார். குழந்தை பேற்றுக்கான வயதை அவர் கடந்து விட்டதால், குழந்தை ஏக்கத்தோடு, கணவருடன் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார்.தனக்கு, 'டைப் 2 டயபடிக்' இருப்பதால், தான் கர்ப்பமடைந்தால், குழந்தைக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற குழப்பத்தோடு, நீரிழிவிற்காக எடுத்துக் கொள்ளும் மருந்து அட்டைகளை காட்டினார். ரம்யாவிற்கு சிகிச்சையை விட, நோய் குறித்தும், அதனால் கர்ப்பம் அடைய மாட்டோேமா என்பது குறித்தும் பயம் இருந்தது.பயத்தை நீக்க கவுன்சிலிங் கொடுத்தேன். அவர் நீரிழிவிற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், நஞ்சுக் கொடியை தாண்டி சென்று, குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ரம்யா எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளை மாற்ற வேண்டி இருந்தது. கர்ப்ப காலத்தில், 'மெட்பார்மின், கிளைபுரைடு' என்ற மாத்திரைகளை எடுப்பது மட்டுமே பாதுகாப்பானது. இந்த மாத்திரைகளை சாப்பிட்டும் சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லையென்றால், இன்சுலின் எடுக்க வேண்டும்.அடுத்த நான்காவது மாதம், ரம்யாவிற்கு கர்ப்பம் உறுதியானதற்கான பரிசோதனை முடிவு வந்தது. இனி, ரம்யா, கவனமாக இருக்க வேண்டும். கரு உருவான முதல் மூன்று மாதத்தில், குழந்தைக்கு உடலின் முக்கிய உறுப்புகள் உருவாகும். இச்சமயத்தில், ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றால், கருச்சிதைவு ஏற்படும்.மேலும், குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளாக, இதயக் கோளாறு, மைய நரம்பு மண்டலம் போன்றவை பாதிக்கக்கூடும் என்பதை, ரம்யாவிற்கு எடுத்துக் கூறி, நீரிழிவிற்கான பரிசோதனையை அடிக்கடி செய்து, இன்சுலின் எடுத்துக் கொண்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொண்டோம்.அதோடு, ஸ்கேன் பரிசோதனை செய்து, கரு உண்டாகி எத்தனை நாட்கள் ஆகின்றன என்பதை தெரிந்து கொண்டோம். 12, 13வது வாரத்தில், ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனையில் குழந்தைக்கு, 'டவுன் சிண்ட்ரோம்' இல்லை என்பதை உறுதி செய்தோம். மறுபடியும், 20வது வாரத்தில் ஸ்கேன் செய்து, குழந்தையின் உடல் உறுப்புகளில், பிறவிக் குறைபாடுகள் ஏதும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டோம். அதோடு, 'எக்கோ கார்டியோ கிராபி' பரிசோதனையும் செய்தோம். பிரசவ நாட்கள் நெருங்கும் சமயத்தில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் பனிகுடம் நீர் சீராக உள்ளதா என்பதை கண்காணிப்பது அவசியம். குழந்தையின் இதயத்துடிப்பை, 'எலக்ட்ரானிக் பிடல் மானிட்டரிங்' மூலம் கண்காணிப்பது அவசியம் என்பதால், அவற்றையும் செய்தோம். கர்ப்பத்திற்கு முன் ஏற்படும் நீரிழிவால், சிறுநீரக கோளாறு மற்றும் டயபடிக் ரெட்டினோபதி எற்படும் வாய்ப்பு அதிகம். ரம்யா, தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால், பிரச்னைகள் ஏதும் வராமல் ஆரோக்கியமாக இருந்தார். 38வது வாரத்தில், சுகப்பிரசவத்தில் அழகான இளவரசன் போல், ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.- எஸ்.ராஜஸ்ரீ, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்,தி.நகர், சென்னை 74027 23416