உள்ளூர் செய்திகள்

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - பசிக்கிறது; சாப்பாடு போடு!

உடற்பயிற்சி செய்ய வேண்டும்; உடலுழைப்பு மிக அவசியம் என்ற விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஆனால், உடற்பயிற்சி மட்டும் தவறாமல் செய்துவிட்டு, உணவுப் பழக்கத்தில், எந்த மாற்றமும் செய்யாவிட்டால், உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோமோ, அதே அளவு கலோரி செலவழித்து விட்டால், உடல் எடை கூடவும் கூடாது; குறையவும் குறையாது.அதிக கலோரி சாப்பிட்டு, அதற்கேற்ப உடலுழைப்பு இல்லாவிட்டால், அதிகப்படியான கலோரி, கொழுப்பாக மாறி, உடலில் தங்கி, எடை அதிகரிக்கும். அதிக எடையுடன் இருந்தால், எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோமோ, அதை விட அதிக கலோரி செலவழிய வேண்டும். அப்போது தான், ஏற்கனவே இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரையும்; எடை குறையும்.குறைவாகத் தான் சாப்பிடுகிறோம்; குறைந்த அளவு வேலை தான் செய்கிறோம் என்றால், எடை கூடாமல் சீராக இருக்கும். 'டயட்'லே இருக்கேன்; எடை குறைய மாட்டேங்குது என்று சொல்வர். அதிகப்படியான எடை எவ்வளவு உள்ளது, தினமும் நாம் சாப்பிடும் கலோரி எத்தனை, எவ்வளவு கலோரி செலவழிகிறது என்று பார்ப்பதில்லை.'ஜிம்'மில், 200, 300 கலோரி செலவழித்து, வெளியில் வந்தவுடன், 'பீட்சா, ஐஸ் கிரீம், பர்கர்' என, கலோரி நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிடுவர்; செலவழித்த கலோரியை விடவும், இரண்டு மடங்கு அதிகம் சாப்பிட்டால், எப்படி எடை குறையும்?அதே நேரம், பட்டினி கிடந்து எடையைக் குறைக்க முயற்சி செய்யக் கூடாது. பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், எதற்காக உணவு கிடைக்கவில்லை என்பது, நம் உடம்பிற்குத் தெரியாது. இனி எப்போது உணவு கிடைக்குமோ என்று, எது சாப்பிட்டாலும், உடல் உள் உறுப்பு செயல்பாடுகள் குறைந்து, சாப்பிட்ட உணவு மொத்தமும் கொழுப்பாக மாறி, சேமித்து வைத்து விடும்.பட்டினி கிடக்கிறேன் என்று, வேளைக்கு சாப்பிடாமல், பசி தாங்க முடியாத நேரத்தில், நேரம் தவறி சாப்பிடுபவர்களுக்கு, வழக்கத்தை விடவும் உடல் எடை அதிகரிக்கும். அதிக நேரம் சாப்பிடாமல், உணவைப் பார்த்தவுடன், கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாக சாப்பிட்டு விடுவோம்.உடம்புக்கு தெரியாது; எனக்குப் பசிக்கிறது; சாப்பாடு போடு என்று துரிதப்படுத்தும்; அந்த வேகத்தில் என்ன கிடைக்கிறதோ, அதைச் சாப்பிட்டு விடுவோம். 'பிரிஜ்'ஜில் சேமித்து வைக்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும். பிரிஜைத் திறக்கும் நேரத்தில், அதில் இருக்கும் சாக்லேட், ஐஸ் கிரீம் சாப்பிடத் துாண்டும்.காய்கறி, பழம், நட்ஸ் என்று ஆரோக்கியமான உணவை சேமித்து வைத்தால், அடிக்கடி சாப்பிட்டாலும், ஆரோக்கியமான உணவையே சாப்பிடுவோம்.டாக்டர் ஜெய்சித்ரா சுரேஷ்,பொது நல மருத்துவர், சென்னை.98400 56046


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்