பார்வையை பாதுகாப்போம்
சர்க்கரை நோயாளிகள், உடலில் உள்ள சர்க்கரை அளவை, கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், நரம்பு மண்டலம், ரத்தக் குழாய், இதயம் என, உடலில் ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படையும். சர்க்கரை அளவு அதிகரிப்பால், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது அதை, 'டயாபடீக் நியூரோபதி' என்கிறோம்.எந்த பிம்பத்தை பார்க்க வேண்டும் என்றாலும், அதற்கு விழித்திரை அவசியம். ரத்தத்தில், சர்க்கரை அளவு அதிகரித்து, அதைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், விழித்திரைக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, ரத்தக்கசிவு ஏற்படும். புதிது புதிதாக ரத்தக் குழாய்கள் வளர ஆரம்பிக்கும்.இதனால், பார்வை மங்கும். ஒரு கட்டத்தில், 'ரெட்டினா' முழுவதையும் மறைக்கும் அளவுக்கு, ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய் விடக்கூடும். எனவே, கண் பார்வையில், ஏதேனும் சிறு குறைபாடு இருப்பதாக உணர்ந்தால், கண் ரத்த அழுத்த அளவை பரிசோதிக்க வேண்டும்.இதற்கு, கண்ணில் சொட்டு மருந்தைவிட்டு, 'இன்டேரக்ட் ஆப்தல்மோஸ்கோப்பி' என்ற பரிசோதனை மூலம், ரத்தக் குழாயில் விரிசல், ரத்தக் கசிவு இருக்கிறதா என்பதை அறிந்து, பரிசோதனை முடிவில் அடிப்படை, சிகிச்சை அளிக்கப்படும்.'டயாபடீக் ரெட்டினோபதி'யில், 10 விதமான நிலைகள் உள்ளன. முதல் ஐந்து நிலைகளுக்குள் இருக்கும் பட்சத்தில், எந்த சிகிச்சையும் தேவையில்லை. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், 'டயாபடீக் ரெட்டினோபதி'யின் தீவிரத்தை தடுக்கலாம்.ஆறு முதல், பத்து நிலைகளில் இருந்தால், ரத்தக் குழாய்கள் விரிசல் அடைந்துள்ளதா, ரத்தம் எவ்வளவு கசிகிறது, ரத்தக் குழாய்கள் வளர்ந்திருக்கிறதா என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில், 'லேசர்' முறையில், கண்ணுக்குள் வெள்ளைப் பகுதியில், 0.5 0.7 மி.மீ. அளவுக்கு மிகச் சிறிய துளையிட்டு, 'விட்ரேக்டமி' என்ற நுண்ணிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.'டயாபடீக் ரெட்டினோபதி'யால் பாதிக்கப்பட்டவர்கள், முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதாலும், மீதமிருக்கும் பார்வைத் திறனை காப்பாற்றிக் கொள்ள முடியும்.கா.நமீதா புவனேஸ்வரி,கண் அறுவை சிகிச்சை நிபுணர்,இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் பேராசிரியர், அரசு கண் மருத்துவமனை, எழும்பூர், சென்னை. 94442 88784