மனசே மனசே... குழப்பம் என்ன!
நடுத்தர வயது பெண் ஒருவர் போனில் பேசினார். 'ஒன்பதாவது படிக்கும் என் மகள், வாரத்தில், ஒரு நாள், பள்ளிக்கு செல்வதில்லை; சரியாக சாப்பிடாமல், துாங்காமல் இருக்கிறாள்; சொல்வது எதையும் கேட்காமல், அடம் பிடிக்கிறாள். 'லீவ்' போட்டு, வீட்டில் இருந்தாலும், 'எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை' என்கிறாள். நன்றாகப் படிக்கும் பெண், சமீப நாட்களாக, சரியாகப் படிப்பதில்லை. என்ன காரணம் என்றே தெரியவில்லை. 'என் தோழி, உங்கள் போன் நம்பரை கொடுத்து, பேசச் சொன்னாள்' என்றார். 'மகளுடன் வாருங்கள்' என்றேன்; அவர் கணவரையும் அழைத்து வரச் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து, மகளுடன் வந்தார். 'அம்மா, ஏன என்னைப் பார்க்க வந்தார் தெரியுமா?' என, மகளிடம் கேட்டதற்கு, 'நீங்க யார் என, தெரியும்; ஏன் அம்மா இங்கு வந்தார் என்ற காரணம் தெரியாது' என்றாள். நேரிலும், போனில் சொன்ன அதே புகார்களை சொன்னார் அம்மா. 'நான் கொஞ்ச நேரம் அவளோடு தனியாகப் பேசுகிறேன்' எனச் சொல்லி, மகளிடம் பேசினேன். 'இரண்டு வாரங்களாகவே சரியாக ஸ்கூலுக்குப் போகாமல், சாப்பிடாமல், அடம் பிடிக்கிறியாமே... ஏன்' என்றவுடன், அந்த சிறுமி, 'வீட்டில் எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். அவன் என்ன கேட்டாலும் செய்வாங்க. எங்க ரெண்டு பேருக்குமே, பூரி சாப்பிடப் பிடிக்கும். ஆனால், முதலில் அவனுக்கு பூரி கொடுத்து விட்டு, என்னை சோறு சாப்பிடச் சொல்லுவாங்க. 'இன்றுகூட அப்படித் தான். காலை, மதியம் ரெண்டு வேளையும், சாதம் தான் சாப்பிட்டேன். அவன் வெளியில் எப்ப வேணுன்னாலும் போகலாம். எவ்வளவு நேரம் மொபைல்ல பேசினாலும், ஒன்றும் சொல்ல மாட்டாங்க. 'நான் ஸ்கூல் விட்டு வந்தவுடன், மொபைலை பிடுங்கி வச்சிடுவாங்க. அண்ணன் கூட தான் பேசுவாங்க. என்னை எப்போதும் ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. எரிச்சலாக உள்ளது' என்றாள். நெட் கனெக் ஷனோடு, மொபைல் வாங்கித் தந்தது பெற்றோர். மொபைலை வாங்கிக் கொடுக்கும் போதே, சில ஒழுங்குமுறைகளையும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். தினமும், அரை மணி நேரம் பயன்படுத்தலாம். 'ஹோம் ஒர்க்' செய்த பின்னே மொபைலைத் தொட வேண்டும்... இப்படி!மொபைல் போனிலேயே நீண்ட நேரம் இருப்பதாக எப்போது தோன்றுகிறதோ, அந்த சமயத்தில், வலுக்கட்டாயமாக பிடுங்கி வைப்பது தவறு. இந்தப் பெண்ணின் பிரச்னையே, தன்னைக் காட்டிலும், அண்ணனுக்குத் தரும் முக்கியத்துவம். அது வெறுப்பை தந்திருக்கிறது. அதிலிருந்து வெளியில் வர, நண்பர்களுடன் அதிக நேரம் போனில் செலவிட்டு உள்ளார். அந்த சுதந்திரத்தையும் பறித்தவுடன், தினசரி நடவடிக்கையில், பிரச்னை வந்து விட்டது. மொபைல் போன் எதற்கு, எப்படி பயன்படுத்த வேண்டும்; படிப்பு தவிர, அவளுக்குப் பிடித்த விஷயங்களில் திறமையை வளர்க்க வேண்டிய அவசியம் என்பதை, எடுத்துச் சொன்னவுடன், புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.ஆனால், அம்மா, குழந்தைகளிடம், கண்டிப்பாகவும், அதே நேரத்தில், அன்பாகவும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனச் சொன்னால், புரிந்து கொள்ள மறுக்கிறார். இப்படியே குழந்தைகளிடம் நடந்து கொண்டால், 18 வயதில், குழந்தைகளுக்கு, உங்கள் மேல் வெறுப்பு தான் மிஞ்சும். 'பேரன்டிங்' பற்றி அவருக்குப் புரிய வைக்கும் முயற்சியை செய்து வருகிறேன்.எஸ்.திவ்ய பிரபா,மனநல ஆலோசகர், சென்னை.stepsfoundations@gmail.com