உள்ளூர் செய்திகள்

கூகுள் டாக்டர் தரும் மருத்துவ ஆலோசனை

நாற்பது ஆண்டுகளுக்கு முன் கவனத்திற்கு வந்த ருமட்டிசம் எனப்படும் மூட்டு வாத நோய் தற்போதும் அதிகம் அறியப்படாத ருமட்டாலஜி என்ற தனி சிறப்பு மருத்துவப் பிரிவு. ருமட்டிசம் என்ற சொல் ஆர்த்ரைடீஸ் என்றே தற்போது குறிப்பிடப்படுகின்றது.இதில், 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பொதுவாக இந்த நோய்கள் அனைத்தும் ஆட்டோ இம்யூன் டிசாடர் எனப்படும் சுய எதிர்ப்பால் வருகின்றது.நம் வெள்ளை அணுக்கள் நம் உடலில் உள்ள திசுக்களை, செல்களை வேறு இடத்தில் இருந்து இரவல் வாங்கப்பட்டதாக நினைத்து அதைத் தாக்கும். உடலில் உள்ள எந்த உறுப்பையும் பாதிக்கலாம். மூட்டுக்களில் பாதிப்பு வந்தால் ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் எனவும், சிறுநீரகங்கள், தோல், இதயம், செரிமான மண்டலம், நுரையீரல், மூளை, ரத்த அணுக்கள் உட்பட மற்ற உறுப்புகளை பாதித்தால், 'சிஸ்டமிக் லுாபஸ்' எனவும், தோல் இறுக்கம், நுரையீரல் சுருக்கம் ஏற்பட்டால் 'சிஸ்டமிக் ஸ்க்லீரோஸிஸ்' எனவும் பல் வேறு விதமான நோய்களாக உருவெடுக்கும். தோல் நோயான சோரியாசிசும் சுய எதிர்ப்பு நோயாகும். இதிலும் மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு ஸொரியாட்டிக் ஆர்த்ரைட்டீஸ் தோன்றும். இரண்டு எலும்புகள் இணையும் பகுதி மூட்டு எனப்படும். எலும்புகளின் முனையில் குறுத்தெலும்பு - கார்ட்டிலேஜ் இருக்கும். இந்த எலும்புகளை இணைக்க தசை நார்களும், இணைப்பு நார்களும் மூட்டுக்களில் உள்ளன. இவையனைத்தையும் உள்ளடக்கி ஒரு சவ்வு பை மூட்டுக்களை பாதுகாக்கும். மூட்டினுள்ளே எலும்புகள் இலகுவாக இயங்க ஸைனோவியம் என்ற மெல்லிய படலமும், சிறிது மூட்டு திரவமும் இருக்கும். மூட்டுக்களில் ஏற்படும் வலி, வீக்கம் அழற்சி ஆர்த்ரைடீஸ் எனப்படும்.ஆண், பெண் இருவருக்கும் மூட்டு வாத நோய்கள் பாதிப்பு ஏற்பட்டாலும், ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ், 20 - --40 வயதுடைய பெண்களையே அதிகம் பாதிக்கும். சுய எதிர்ப்பு தவிர, உடல் பருமன், வயதானால் மூட்டுக்கள் தேய்வது, அதிக எடை சுமப்பது, மூட்டுக்களில் ஏற்படும் காசநோய், மூட்டுக்களில் அதிக அளவு யூரிக் அமிலம் சேருவது, வைரஸ் தொற்றினாலும் ஆர்த்ரைடீஸ் வரலாம். சுய எதிர்ப்பு நோய் காரணமாக வரும் ஆர்த்ரைடீசை கட்டுக்குள் வைக்கலாம்; குணப்படுத்த முடியாது. காலையில் எழுந்ததும், கை, கால் மூட்டுக்கள் இறுகி விறைப்பாக அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அசைக்க முடியாது. நோயை உறுதி செய்ய 'ருமட்டாய்டு பேக்டர்ஆன்டிசிசிபி' ஏ என் ஏ என்ற ரத்த பரிசோதனையில் உறுதி செய்யலாம்.சிகிச்சைக்கு முன் ரத்த அணுக்களின் எண்ணிக்கை, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் செயல்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், நீண்ட நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிலையில், மருந்துகளின் பக்க விளைவால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரின் ஆலோசனையின் படி, தேவைப்படும் பரிசோதனைகளை செய்து, அதற்கேற்ப மாத்திரைகளை கூட்டியோ குறைத்தோ தர வேண்டியிருக்கும்.ஆர்த்ரைடீஸ் பிரச்னைக்கு கடந்த 10 ஆண்டுகளில் புதிய மருந்துகள் நிறைய வந்துள்ளன. இவற்றில் 'பயலாஜிக்கல்ஸ்' என்ற மருந்து இப்போது நம் நாட்டிலேயே தயாராவதால், குறைந்த விலையில் கிடைக்கிறது. இதைத் தவிர நிறைய மருந்துகள் புதிதாக வந்த வண்ணம் உள்ளன.மரபணு மாற்றம் செய்வதன் வாயிலாக இதற்கு நிரந்தர தீர்வு தர முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடக்கிறது.ஆர்த்ரைடீஸ் என்றதும் மன அழுத்தம் அடையத் தேவையில்லை. சரியான டாக்டரின் ஆலோசனையைப் பின்பற்றினால் நோயைக் கட்டுக்குள் வைக்கலாம். குறிப்பாக, வாட்ஸ்ஸாப், கூகுள் டாக்டர் சொல்லும் கருத்து திணிப்புகளை நம்பக் கூடாது. மூட்டு வலியை குறைத்து தசைகளைப் பலப்படுத்த பிசியோதெரபி உதவும்.டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி,மூட்டு முடக்குவாத சிறப்பு மருத்துவ ஆலோசகர்,சென்னை மீனாட்சி மருத்துவமனை, சென்னை044 - 4293 8938drvk56@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்