அறுவை சிகிச்சை வேண்டாம்; பழைய சோறே அருமருந்து
ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் நம்பிக்கை'மனிதர்களுக்கு ஏற்படும் 80 சதவீத குடல் நோய்களுக்கு, அறுவை சிகிச்சை தேவையில்லை; பழைய சோறே அருமருந்து' என, ஸ்டான்லி மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.பழைய சோற்றின் மருத்துவக் குணங்கள் குறித்து, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.அந்த வகையில், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.மனித உடலில், குடலில் ஏற்படும் அலர்ஜி, புண்கள், அல்சர் காரணமாக குடல் புண்ணாகி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே, பழைய சோறு காப்பாற்றி வருகிறது. இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க, தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியுடன், மூன்று ஆண்டுகள் ஆய்வு நடக்க உள்ளது.இது குறித்து, துறை பேராசிரியர் ஜெஸ்வந்த் கூறியதாவது:பெருங்குடல் அலர்ஜி, சிறுகுடல் அலர்ஜி, வாய்ப்புண், குடல்புண் என, தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.அவர்களின் உணவு பழக்க வழக்க மாற்றமே, நோய்களுக்கான காரணமாக அமைகிறது.குடல் புண், அலர்ஜி, வாய்புண்ணுடன் வந்த நோயாளிகளுக்கு, பழைய சோறு சாப்பிட சிபாரிசு செய்தோம். தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டு வந்தவர்களுக்கு, நோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பல ஆண்டு காலமாக மருந்துகள் எடுத்தும், அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்ய முடியாத குடல் நோய் பிரச்னைகள், பழைய சோறு சாப்பிட துவங்கியவுடன் சரியானது தெரிந்தது.இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவே, தமிழக அரசின் நிதியுதவியுடன் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என துல்லியமாக கண்டறியப்பட்டு வருகிறது. கிராமப்புறம், நகர்ப்புறம் என, வெவ்வேறு இடங்களில் பழைய சோறு தயாரிக்கும் போது, பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் என கணக்கிடப்படும்.வெவ்வேறு வகையான அரிசி பயன்படுத்தப்பட்டு, அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும். பழைய சோற்றில் குடலை வலுப்படுத்தும் நல்ல பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, இயற்கை முறையில் பயிரிடப்பட்ட கைக்குத்தல் அரிசி பழைய சாதம், சாதாரண அரிசி பழைய சாதத்தை விட பன்மடங்கு சிறந்தது.பழைய சோறு சாப்பிட்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவு கட்டுக்குள்ளேயே இருக்கும். பழைய சோற்றை மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால், அதிக பலன் கிடைக்கிறது.பழைய சோறு எளிதில் ஜீரணமாகும் சத்துக்கள் நிறைந்தது. 80 சதவீத குடல் நோய்களுக்கு மருந்தாக பழைய சோறு உள்ளது என, ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.