தலைமுடி வறட்சியை போக்கும் எண்ணெய்!
கோடை முடிந்து, குளிர் காலம் துவங்கும் போது, தோலில் ஏற்படும் வறட்சி பொதுவான விஷயம். காரணம், குளிர் காலத்தில் நமக்கு வியர்க்காது; தண்ணீரும் குறைவாகவே குடிப்போம்; தோலின் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இதனால், தோல் வறட்சி குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும்.வறட்சியாக இருக்கும் தோல், வெளிக் காரணிகளால் எளிதில் பாதிக்கக் கூடியது. வெளியில் இருக்கும் துாசி, துகள்கள், செடி, கொடிகளில் இருந்து பரவும் மகரந்த துகள்கள் தோலில் படுகையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் வியர்க்குரு போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். மற்ற பருவங்களை ஒப்பிடுகையில், மகரந்த துகள்கள் இந்தப் பருவத்தில் அதிகம் காற்றில் பரவக் கூடியவை; அவற்றின் தன்மையும் வழக்கத்தைக் காட்டிலும் மாறுபட்டதாக இருக்கும்.வறட்சியான தோலை தவிர்க்க, தினமும் 3 - 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்; ஆனால், 'ஏசி' அறையில் இருப்பவர்கள், போதுமான அளவு நீர் குடிப்பதில்லை. நீர்ச் சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். தோலின் தன்மைக்கு ஏற்ற, ஈரப்பதத்தை தக்க வைக்கும் 'கிரீம், லோஷன்'களை பயன்படுத்த வேண்டும். குளித்து முடித்ததும், ஈரமான தோலில் தடவ வேண்டியது முக்கியம்; அப்போது தான் தோலின் ஈரப்பதம் நன்றாக இருக்கும்.தோல் போலவே, தலைமுடி பராமரிப்பும் முக்கியம். தலையிலும் அதிகமாக வியர்க்காது என்பதால், அடிக்கடி தலைக்கு குளிக்க மாட்டோம்; இதனாலேயே தலைமுடி வறட்சியாகி விடும். தலையின் மேல்புறத் தோலில் வறட்சி ஏற்பட்டு பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். வாரத்திற்கு ஒரு முறையாவது, தலையின் மேல்புறத்தில், தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெய் தடவி, நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ வேண்டும்.தலையில் எண்ணெய் தடவி, இரவு முழுதும் அப்படியே துாங்குவது தவறு. அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு மேல் எண்ணெய் மசாஜ் செய்த தலை, தோலுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.- டாக்டர் ஷர்மிதா குமார், சென்னை.