புதிய சீசாவில் அடைக்கப்பட்ட பழைய மருந்து!
கொரோனா தொற்று ஏற்பட்ட சில வாரங்களில், சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்ட மருந்து, ஹைட்ராக்சி க்ளோரோக்வின், சுருக்கமாக ஹெச்.சி.க்யு., அதிலும், அமெரிக்க அதிபர் நம்மிடம் இருந்து இந்த மருந்தை மிரட்டி வாங்கியதில், இன்னும் அதிகமாகவே செய்திகளில் அடிபட்டது.கொரோனா தொற்றுக்கு இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பலரும் சொல்ல, பல ஆண்டுகளாக இந்த மாத்திரையை சாப்பிடுபவர்கள் மத்தியில் குழப்பமும், பயமும் ஏற்பட்டு விட்டது. நீண்ட காலமாக இதை சாப்பிடும் பலர், நிறுத்தலாமா என்று கேட்கின்றனர். கொரோனா தொற்றுக்கு இந்த மாத்திரையால் எந்த பயனும் இல்லை; இதன் பயன்பாடு வேறு. அதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். காரணம், என்னை போன்ற, மூட்டு முடக்கவியல் டாக்டர்களின் தேர்வு இந்த மாத்திரை. எந்த பிரச்னைக்காக இதை பயன்படுத்த வேண்டுமோ, அதற்கான சரியான அளவில் தந்ததால் தான், கடந்த 70 ஆண்டுகளில் பிரச்னை எதுவும் இல்லை.இது குளோரோக்வின் என்ற மாத்திரையின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு. 1950லிருந்து புழக்கத்தில் உள்ளது. பல்வேறு வகையான, முடக்கவியல் நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. 'ஆட்டோ இம்மியூன் டிசாடர்' எனப்படும், நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடலில் உள்ள செல்களையே அழிப்பதால் ஏற்படும், ருமட்டாய்டு ஆர்தரட்டீஸ் பிரச்னைகளுக்கு இதை சாப்பிடுவதால், செல்கள் அழியும் வேகம், வெகுவாக குறைகிறது. அதேபோல, ரத்தத்தில் அதிக கொழுப்பு, சர்க்கரையை கட்டுப்படுத்தவும், ரத்த உறைவை தடுக்கவும் பயன்படுகிறது.வேறு என்ன பலன்கள்?குறைந்த விலையில், எளிதாக கிடைக்கக் கூடியது. நம் நோய் எதிர்ப்பு அணுக்கள், நம்முடைய திசுக்களை அழிப்பது, முகம், கை மற்றும் கால்களில் ஏற்படும் சில தோல் நோய்கள், தசைகளில் ஏற்படும் பலவீனம், தோலில் வரும் தடிப்புகளால் உடலில் ஆங்காங்கே வரும் வீக்கம்.நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் மாற்றத்தால், கண்கள் மற்றும் வாயில் வறட்சி ஏற்படுவது, நம் ரத்தத்தில் உள்ள புரதத்தை அழிப்பது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், அடிக்கடி ஏற்படும் கர்ப்ப சிதைவு.இதன் காரணமாக வரும் தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் இந்த மாத்திரை சிறந்த நிவாரணியாக உள்ளது.இந்த மாத்திரையை தொடர்ந்து பல மாதங்கள் சாப்பிட்டாலும், பக்க விளைவுகள் மிக குறைவாகவே இருக்கும். பல மாதங்கள் சாப்பிட்டு, உடனடியாக மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தினாலும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.ருமட்டாய்டு ஆர்தரட்டீஸ் கோளாறு மட்டும் இருந்தால், இதை தனியாகவும், இதோடு வேறு உடல் பிரச்னைகள் இருந்தால், அதற்கான மாத்திரைகளை சேர்த்தும் சாப்பிட சொல்வோம். எந்த மாத்திரையோடு சேர்த்து இதை சாப்பிட்டாலும், பிரச்னை இல்லை. இந்த மாத்திரையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?கண்களின் விழித்திரையில் கோளாறு வரும் வாய்ப்போ அல்லது அதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பவர்கள், கல்லீரல், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், மது பழக்கம் இருந்தால், கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.பொதுவான பக்க விளைவுகள் இருக்குமா?தலை முடி உதிர்வது, குமட்டல், தோலில் நிறமி குறைபாடு, சொரியாசிஸ், தலை முடி வெளுப்பது போன்றவை, மாத்திரை சாப்பிடும் போது ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள்.அரிதாக ஏதேனும் ஏற்படுமா?ஆண்டுக்கணக்கில் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டிய அவசியம் இருப்பவர்களுக்கு, பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை, முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.கவலைப்படும்படி வேறு எந்த பக்க விளைவும் இல்லை என்றால், கொரோனா தொற்று நோயாளிக்கு தரும் போது மட்டும் இதய பாதிப்பு ஏற்படுவது ஏன்?காரணம், 'டோசேஜ்' எனப்படும் மாத்திரையின் அளவு. ஒருவரின் உடல் எடைக்கு தகுந்தவாறு தர வேண்டும்.ஒரு கிலோ உடல் எடைக்கு, 5 மி.கி., அளவு தான் சாப்பிட ஒரு நாளைக்கு வேண்டும். ஒருவரின் உடல் எடை, 50 கிலோ என்றால், அவருக்கு, 250 மி. கி., மட்டுமே தர வேண்டும். ஆனால், கொரோனா நோயாளிக்கு, பொதுவாக 800 மி.கி., தருவதால், இதய பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே நோய் தொற்று இருப்பவரின் இதயம் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதிக டோஸ், ஹெச்.சி.க்யு. மாத்திரையுடன், அசித்ரோமைசின் சேர்த்து தருவதால், இதய பாதிப்பு ஏற்படுகிறது.ருமட்டாய்டு கோளாறுக்கு, ஹெச்.சி.க்யு., மாத்திரை சாப்பிடுபவர்கள், கொரோனா காலத்திலும் நிறுத்தக் கூடாது. தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த சிகிச்சையோடு, மருத்துவரின் ஆலோசனையுடன், இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும்.டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், மூட்டு, முடக்கவியல் நிபுணர், அப்பலோ மருத்துவமனை, சென்னை. 98408 20053ramkisandy@gmail.com