உள்ளூர் செய்திகள்

வலிநீக்கும் வரம் அனஸ்தீஸியா

மருத்துவத்துறையில் அனஸ்தீஸியா எனப்படும் மயக்கவியல் துறையின் பங்கு இன்றியமையாதது. இத்துறை இல்லாவிடில் எந்த ஒரு ஆப்பரேஷனையும் மேற்கொள்ள முடியாது. பழைய காலங்களை விட இப்போது இத்துறை அசாத்திய வளர்ச்சி பெற்றுள்ளது.இதனால் நினைத்த மாத்திரத்தில் மனிதனை ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு சென்று உறுப்புகளை கட்டுப்படுத்தி பாதுகாப்பான முறையில் அவற்றின் இயக்கங்களை சீராக்க முடியும். பின்னர் மீண்டும் மாற்று மருந்து செலுத்தி நோயாளியை இயல்புநிலைக்கு கொண்டுவரலாம்.16ம் நுாற்றாண்டிலேயே அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் முயற்சி துவங்கினாலும், வெற்றி கிட்டவில்லை. 17 ம் நுாற்றாண்டில் நோயினால் அழுகிய கால்களை வெட்டி அகற்றுவது போன்ற மிக அவசரமான சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.4 பலசாலிகள் நோயாளியை அசையவிடாமல் பிடித்துக்கொள்வர். சில நிமிடங்களில் அழுகிய காலை வெட்டி அகற்றி டாக்டர் ஆப்பரேஷனை முடிப்பார். இத்தகைய அதிவேகம், அக்காலத்தில் மருத்துவரின் சிறப்பு தகுதியாக கருதப்பட்டது. இம்முறையில் மரணங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.இச்சூழலில் 1846ல் அக்.,16ல் மனித குலத்திற்கே வரப்பிரசாதமாக கருதப்படும் மயக்க மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதை கண்டுபிடித்தவர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன். இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பொது மருத்துவமனை ஒன்றில் புகழ்பெற்ற டாக்டர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக செயல்விளக்கம் செய்து காட்டினார். தான் கண்டுபிடித்த 'ஈதர்' என்னும் வேதிப்பொருளை ஆவியாக்கி நோயாளியை சுவாசிக்க செய்தால் வலியை முழுமையாக நீக்க முடியும் என நிரூபித்தார்.குறுகிய காலத்தில் ஈதர் உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்தது. இம்மயக்க மருந்து மிகவும் பாதுகாப்பானதாகவும், உபயோகிக்க எளிதாக இருந்ததாலும் 140 ஆண்டு காலம் கோலோச்சியது. பின்னர் அதை பின்பற்றி பலவகை மருந்துகள் வந்துவிட்டன.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வையும், ஈதரை உலகுக்கு அறிமுகம் செய்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் நினைவையும் போற்றும் விதமாக அக்., 16 'ஈதர் டே' என்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அதுவே உலக மயக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனிதனின் வலியை வெற்றிகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டு 173 ஆண்டுகள் ஆகின்றன.- டாக்டர் ஏகநாத பிள்ளை மயக்கவியல் நிபுணர், மதுரை98421 68136


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !