உள்ளூர் செய்திகள்

காக்க காக்க இருதயம் காக்க...

எனக்கு ஆறு ஆண்டுகளாக சர்க்கரை வியாதி உள்ளது. சமீபத்தில் ரத்தஅழுத்தமும் ஆரம்பமாகி உள்ளது. இதற்கு என்ன மாத்திரை எடுத்தால் நல்லது?- எஸ்.ஆர். மோதிலால், மதுரை.இன்று ரத்தஅழுத்தத்திற்கு பலவகை மருந்துகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வழிகளில் சிறப்பு செயல்பாடு உடையவை. அதேசமயம் பக்கவிளைவுகளும் உண்டு. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ரத்தஅழுத்த மாத்திரைகளில், தற்போது ARB, ACE  மற்றும் CALCIUM BLOCKER சிறந்ததாக உள்ளன. இதில் எது சிறந்தது என்று உங்கள் டாக்டர் அறிவுரைபடி உட்கொள்வது நல்லது.

எனக்கு ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்ததில், மூன்று ரத்த நாளங்களில் 60 முதல் 70 சதவீதம் வரை அடைப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. டாக்டர் பைபாஸ் சர்ஜரி தேவை இல்லை என்கிறார். மற்றொரு டாக்டரிடம் ஆஞ்சியோகிராம் டெஸ்ட் "சிடி'யை காண்பித்தபோது, மருந்து, மாத்திரை போதுமானது என்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்?- ஏ. அலெக்ஸ், சிவகாசி.இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் Border Line அடைப்புகள் 60 முதல் 70 சதவீதம் வரை இருந்தால், இப்படி வேறுபட்ட கருத்துகள் ஏற்படலாம். இதற்கு STRESS THALLIUM என்ற பரிசோதனை மிக முக்கியமானதாகும். ஆஞ்சியோ கிராம் டெஸ்ட்டில் அடைப்பு உள்ளதோ, இல்லையா என்பதை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால் STRESS THALLIUM  டெஸ்ட்டில், இந்த அடைப்புகளால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறதா, இல்லையா என்று கண்டறிய முடியும். உங்களுக்கு இந்த டெஸ்ட் நார்மலாக இருந்தால் மருந்து, மாத்திரைகளே போதும். இல்லாதபட்சத்தில் பைபாஸ் சர்ஜரி செய்வது நல்ல முடிவாக இருக்கும்.

மாரடைப்பு மூன்று முறைதான் வருமா?- சி.சந்திரபோஸ், திண்டுக்கல்இது தவறான கருத்து. இருதயத்தில் இருக்கும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் இருதய தசைகள் பாதிக்கப்படும் போது அதை மாரடைப்பு என்கிறோம். எத்தனையாவது முறை மாரடைப்பு என்பது முக்கியமல்ல. எந்த ரத்தநாளத்தில், எந்த இடத்தில் ரத்த ஓட்டம் பாதிக்கிறது என்பதை பொறுத்தே மாரடைப்பின் தீவிரம் நிர்ணயிக்கப்படுகிறது. முக்கியமாக, ரத்தநாளத்தில் முதன்முறையாக அடைப்பு ஏற்பட்டாலே, மிகத்தீவிரமாக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்ககூட வாய்ப்புள்ளது. சிறிய ரத்தநாளங்களில் பலமுறை அடைப்பு ஏற்பட்டும், இருதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்கும்.

எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து இரு மாதங்களாகின்றன. என்னால் எப்போது கார், டூவீலர் ஓட்ட முடியும்?- பி.சங்கையா, கிருஷ்ணன்கோவில்.பைபாஸ் சர்ஜரி செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின், ரத்தம், சிறுநீர் பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, Echo  டெஸ்ட், TMT டெஸ்ட் செய்யப்படும். இவை அனைத்தும் நார்மலாக இருந்தால் நீங்கள் கார், டூவீலர் ஓட்டலாம்.- டாக்டர் விவேக் போஸ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !