உள்ளூர் செய்திகள்

கேள்வி-பதில்

சிறு வயதில் இருந்தே நன்றாக விளையாடுவேன். இப்போது என் வயது 30; திருமணம் ஆகிவிட்டது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு, பல சமயங்களில் நடந்தே தான் செல்வேன். கடந்த ஓராண்டாக சிறிது தூரம் நடந்தவுடன், என் இடது கால் ஆடுசதையில் பயங்கர வலி வருகிறது. அந்த இடம் இறுக்கி பிடித்தது போன்ற உணர்வு. சிறிது நேரம் உட்கார்ந்து பின் நடந்தால் வலி இல்லை. ரத்த குழாய்களில் பிரச்னை இருக்கலாம் என்று, அருகில் உள்ள டாக்டர் சொல்கிறார். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?ஜெயந்தி சங்கர், பொள்ளாச்சிநீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், கால்களில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதைப் போல தோன்றுகிறது. உடலின் கீழ் பகுதிக்கு ரத்தத்தைத் தரும், 'அயோட்டா' எனப்படும் மகாதமனி, வயிற்றுக் பகுதிக்கு கீழே, இரண்டாகப் பிரிந்து, இரண்டு கால்களுக்கும் ரத்தத்தை தருகிறது. கால்களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில், ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால், இந்தப் பிரச்னை வரலாம். ரத்தக் குழாய்கள் சுருங்குவதால் ஏற்படும் ஆரம்ப கட்ட பிரச்னை இது. உடற்பயிற்சி செய்யும்போது தேவைப்படும் ஆக்ஸிஜன் நிரம்பிய நல்ல ரத்தம், கால்களுக்கு போதுமான அளவு கிடைப்பதில்லை. அதனாலேயே நடந்தால் வலி வருகிறது. நீங்கள் உடனடியாக ரத்த நாள் சிறப்பு மருத்துவரிடம் சென்று, 'பெரிபெரல் டாப்ளார் ஸ்டடி' என்ற பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். இதில் கால்களில், எந்த இடத்தில் ரத்தம் கட்டியுள்ளது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். 90 சதவீதம் மருந்து மாத்திரையாலே பிரச்னையை சரி செய்து விட முடியும். உடலில் எந்த இடத்தில் இதுபோன்ற பிரச்னை இருந்தாலும் உடனடியாக சிகிச்சை செய்து கொள்வது முக்கியம். இல்லாவிட்டால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், அந்த இடத்தில் உள்ள திசுக்கள் அழிந்து கறுப்பாக மாறும் அபாயம் உள்ளது.டாக்டர் எம்.பக்தவச்சலம், ரத்த நாள சிறப்பு மருத்துவர், அரசு பன்நோக்கு மருத்துவமனை, சென்னைஎனக்கு சைனஸ் பிரச்னை உள்ளது. சமீப காலமாக இதனால் ஏற்படும் சளி, மூக்கின் ஓரங்களில் வலி, தலைவலி அதிகமாகி விட்டது. நீர்க்கட்டி பாதிப்பு உள்ளதால், அறுவை சிகிச்சை தேவை என்று டாக்டர் சொல்கிறார். சைனஸ் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை அவசியமா?சத்யா, மதுரைவைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், சைனஸை பாதிக்கும் போது வீக்கம், சளித் தொல்லை, மூச்சு விடுவதில் சிரமம், கன்னம், நெற்றி, கண்களுக்கு கீழ் வலி அல்லது கனமான உணர்வு ஏற்படும். நாள்பட்ட தொற்றாக இருக்கும் போது, சைனஸ் பகுதியில், 'போலிப்' எனப்படும் நீர் கோர்த்த அதிகப்படியான சதை வளரும். சைனஸ் பிரச்னை உள்ள அனைவருக்கும் இது வரும் என்று சொல்ல முடியாது. அடிக்கடி நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால், இதுபோன்ற, 'போலிப்' கட்டிகள் வருகிறது. 10 முதல் 20 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஒருவித போலிப்பும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு வேறுவித போலிப்பும் வருகிறது. முதல் வகையில், ஒரு முறை அறுவை சிகிச்சை செய்தால், போலிப் திரும்பவும் வராது. இரண்டாவது வகையில் அறுவை சிகிச்சை செய்த, இரண்டு ஆண்டுகளில் திரும்பவும் வரலாம். உங்கள் வயதை குறிப்பிடவில்லை. அறுவை சிகிச்சை செய்து, டாக்டரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள். டாக்டர் கே.செந்தில், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர், சூர்யா மருத்துவமனை, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !