கேள்வி - பதில்
என் குழந்தைக்கு எட்டு வயதாகிறது. அவள் நடத்தையில் மாற்றம் தெரிகிறது. எதைக் கேட்டாலும் பதற்றமாக பதில் சொல்கிறாள். சில நேரங்களில், நாங்கள் கேட்பது அவளுக்கு எரிச்சலாக உள்ளது. கொஞ்சம் அழுத்திக் கேட்டால் 'எனக்கு ஸ்ட்ரெஸ் ஆகுது' என்கிறாள்; என்ன செய்ய?சாந்தி ராமன், புதுச்சேரிஸ்ட்ரெஸ் என்பது பொதுவான வார்த்தை. குழந்தை விஷயத்தில் அப்படி சொல்லிவிட முடியாது. ஏதோ ஒரு விஷயம் அவளை டென்ஷன் ஆக்குகிறது. அதைத் தாங்கக் கூடிய பக்குவம் குழந்தைக்கு இல்லை. அது வீட்டில், வெளியில், பள்ளியில், விளையாடும் இடத்தில், உடன் பழகும் குழந்தைகளுடன் என்று எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த நேரத்தில், அவளது நடத்தையில் மாற்றம் இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாகவும் அவளுக்கு ஏதும் பிரச்னை உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். பாலியல் தொந்தரவுகளால் குழந்தை நேரடியாக பாதிக்கப்பட வேண்டும் என்பதில்லை. வேறு யாருக்கோ நடப்பது கூட அவள் மனதை பாதிக்கலாம். பெற்றோரிடையே அடிக்கடி நடக்கும் சண்டை, வாக்குவாதம் கூட குழந்தையை பாதிக்கலாம். குழந்தை விதை என்றால் குடும்பம் தான் மண். விதை வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி, காற்று, நீர் இவையெல்லாம் வெளியில் இருக்கும் சமுதாயம். இதில் எங்கிருந்து வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம். குழந்தையின் நிலையில் இருந்து விஷயத்தை அணுக வேண்டும். தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை பெரியவர்கள் போல வார்த்தைகள், செயல்கள் மூலம் வெளிப்படுத்த குழந்தைகளுக்கு தெரியாது.மகிழ்ச்சியான வீடு, சமச்சீரான உணவு, அரவணைப்பு இவை தான் பிரச்னையில் இருந்து வெளிவர குழந்தைக்கு உதவும்.டாக்டர்.ஜெயந்தினி, குழந்தைகள் மனநல சிறப்பு மருத்துவர்.கேன்சரை உண்டாக்கும் கெமிக்கல்கள் பிரெட்டில் இருப்பதாகவும் அதை சாப்பிடவே கூடாது என்று, கடந்த வாரத்தில் செய்தி படித்தேன். அவசரத்திற்கு வசதியாக இருக்கிறது என்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி, 'பிரெட், பன்' போன்றவற்றை வாங்கித் தருகிறேன். இதற்கு மாற்றாக என்ன தரலாம். இத்தனை நாட்களாக இதுபோன்ற பிரெட் சாப்பிட்டதால் பாதிப்பு இருக்குமா?கண்மணி ஜெகதீசன், மதுரைபொட்டாசியம் புரோமேட் போன்ற கெமிக்கல்கள், பேக்கரி உணவுகளில் பயன்படுத்தப்படுவது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது; சில நாடுகளில் தடையில்லை. ஒருசில தனியார் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பில் பொட்டாசியம் புரோமேட் இல்லை என அறிவித்துள்ளது. இந்த சர்ச்சை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து பிரெட், பன், பாவு பாஜி போன்ற பொருட்களை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல. பேக்கரி பொருட்கள் அனைத்திலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய மைதாவும், சர்க்கரையும் தான் அதிகம். அப்படி நார்ச்சத்தே இல்லாத உணவை தொடர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நுண்ணுாட்டச் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இத்தனை நாட்களாக இதை சாப்பிட்டதனால் பாதிப்பு வருமா என்று கேட்டால் உறுதியான பதில் சொல்ல முடியாது. காரணம், பொட்டாசியம் புரோமேட் என்பது புற்றுநோயை வரவழைக்கும் சாத்தியமுள்ள கெமிக்கல். அதுபோல, பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை உண்டாக்கக் கூடியது. சமீப காலமாக, தைராய்டு பாதிப்பு அதிகரித்துவிட்ட நிலையில், தைராய்டு பிரச்னைக்கு வேறு பல காரணங்களும் உண்டு என்பதால், அயோடேட் எந்தளவு காரணம் என்பதை விரிவான ஆய்வுகள் மூலமே தெரிந்து கொள்ள முடியும். அத்தகைய ஆய்வுகள் நம்மிடம் இதுவரை கிடையாது.உத்ரா.யு, ஊட்டச்சத்து நிபுணர், சிம்ஸ், சென்னை.