உள்ளூர் செய்திகள்

கேள்வி - பதில்

'டெங்கு' காய்ச்சல், தற்போது அதிகமாகப் பரவுகிறது; நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தான், டெங்கு பாதிப்பு வருமா?ஆர்.லட்சுமி, கடலுார்நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற வித்தியாசம் எல்லாம், டெங்கு பாதிப்பிற்கு கிடையாது. பகலில் கடிக்கும், 'ஏடிஸ் ஏஜிப்டி' என்ற பெண் கொசுவால் பரவும் வைரஸ் நோய் இது. இந்த கொசு கடிக்கும்போது, வைரஸ் கிருமி, அதன் உடலில் இருந்தால், அது கடிபட்டவரின் ரத்தத்தில் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ் கிருமி, உடலில் நுழைந்தவுடன் ஏற்படும் முதல் அறிகுறி காய்ச்சல். மற்ற காய்ச்சலைப் போல இல்லாமல், டெங்கு பாதிப்பால் வரும் காய்ச்சல், மிக கடுமையாக இருக்கும். விட்டு விட்டுக் காய்ச்சல், மாலையில் மட்டும் காய்ச்சல் என்று இல்லாமல், காய்ச்சல் ஒரே சீராக உடல் உஷ்ணம் தணியாமல், முதல் மூன்று நாட்களுக்கு இருக்கும். பாராசிட்டமால் மாத்திரைகள் கொடுத்தாலும் குறையாது. நான்காவது நாள் காய்ச்சல் சட்டென்று சரியாகி விடும். ஆனால் குழந்தை வழக்கமான சுறுசுறுப்புடன் இல்லாமல், உணவு சாப்பிடாமல் சோர்வாக இருக்கும். காய்ச்சல் தான் சரியாகி விட்டதே என்று, பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் கவனக்குறைவாக இருந்து விடுகின்றனர். இது ஐந்து வயதிற்கு மேற்பட்ட வளர்ந்த குழந்தைகளின் பெற்றோரிடம் அதிகம் உள்ளது. இதனால், 100 குழந்தைகளை டெங்கு பாதித்தால், அதில், 2 குழந்தைகள் (2 சதவீதம்) மிகவும் அபாயகரமான நிலைக்குப் போய் விடுகின்றனர். குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால், 3 நாட்கள் காய்ச்சல் வந்து சரியாகி உள்ளது. அதனால் உணவு சாப்பிடவில்லை என்று, அவர்களாகவே நினைத்துக் கொள்கின்றனர். தட்டணுக்கள் குறைவதால், உடலில் ஏற்படும் சிவப்பு நிற திட்டுக்களையும் கவனிப்பதில்லை. கைக் குழந்தையாக இருந்தால், இந்தத் திட்டுக்களை கவனிக்கும் வாய்ப்பு, உடலை துடைக்கும் சமயங்களில் அதிகம் தெரியும். காய்ச்சல் வந்தபின் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளையும், உடனடியாக டாக்டரிடம் அழைத்து வர வேண்டும். நோய்த் தொற்று தீவிரமானால், ரத்தக் குழாய்களில் உள்ள திரவம் கசிந்து, ரத்தத்தின் திடத்தன்மை அதிகமாகும். இதனால் சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல், இதயம் போன்ற முக்கிய உள் உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டம் செல்வது தடைபடும். கல்லீரல் வீங்கி, அதன் செயல்பாடு குறைந்துவிடும். நினைவு சீராக இருக்காது. மூக்கு, வாயில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத்தில் திரவத் தன்மை எந்த அளவிற்கு குறைந்திருக்கிறது என்பதைக் கண்டறிய, 'பிசிவி' (PCV) என்ற டெஸ்ட் உள்ளது. இதை கண்டிப்பாக செய்து, அதற்கு ஏற்றாற்போல சிகிச்சை செய்ய வேண்டும். டெங்கு பாதித்த குழந்தைகளுக்கு, ரத்த தட்டணுக்கள் குறைந்து விடும். அதனால், உடனடியாக அதை செலுத்த வேண்டும் என்ற அபிப்ராயம் உள்ளது. மிகவும் தீவிர நிலையில், டெங்கு பாதித்த குழந்தைகளுக்கு மட்டுமே தட்டணுக்களை செலுத்த வேண்டும். மற்றபடி, ரத்த திரவத் தன்மையை சீராக்குவதே முக்கியம். பொதுவாகவே நல்ல சுத்தமான நீரில் தான், கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை, இடைவெளி இல்லாமல் மூட வேண்டும். ஏர்கூலர் போன்ற நீர் தேக்கும் சாதனங்களை பயன்படுத்தினால், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நீரை மாற்ற வேண்டும்.டாக்டர் ஜனனி சங்கர்குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்