உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை: பூனையின் காதை அறுத்து..

பிரானேஷ், வயது 16. பதினோராவது படிக்கிறான். சிறுவனாக இருக்கும் போதே, கருத்து வேறுபாட்டால், இவனது பெற்றோர் பிரிந்து விட்டனர். அம்மாவிடம் தான் வளர்கிறான். அப்பா எப்போதாவது வந்து பார்த்து செல்வார். இதற்கிடையில், அவர் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் தாய், மறுமணம் செய்யாமல், ஒருவருடன் 'லிவ் இன்' உறவில் இருந்தார். இதனால் தாயிடமும் பிரானேஷ் இணக்கமாக இல்லை. மனதளவில் பாதிக்கப்பட்டான்; தனிமையை அதிகம் விரும்பினான்.பள்ளியிலும், நண்பர்கள் யாரும் இல்லை. மிகவும் மூர்க்க குணமுடையவனாக மாறினான். ஏதாவது சிறு சண்டையென்றாலும், பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களை தாக்கினான். பள்ளிக்கு செல்லாமல் மட்டம் அடித்து, ஊர் சுற்றிவிட்டு, பள்ளிவிடும் சமயத்தில் சரியாக வீட்டிற்கு வந்துவிடுவான். பள்ளி விடுமுறையில், ஒருநாள் வீட்டிலிருந்தபோது, வீட்டில் வளரும் பூனையின் காதை கத்தியால் அறுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அவன் தாய், அதிர்ச்சியாகி, பிரானேஷை என்னிடம் அழைத்து வந்தார். அவனிடம் பேசிப் பார்த்ததில், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருந்தான். அவனிடம் நான் கேட்ட சில கேள்விகளுக்கு, பதில் தாறுமாறாக வந்தது. காரணம், அவனது நடத்தைக் கோளாறு. இப்பிரச்னையை, 'ஆன்டிசோஷியல் பர்சனாலிட்டி டிசார்டர்' என்போம். சில சூழல்களில், பொதுவாக வன்முறை எண்ணம் வருவது, இயல்பான விஷயம் தான். ஆனால், இதுவே தொடரும்போது, சமூகத்தில் எதிர்மறை, ஆளுமை குணத்தை வெளிப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் வருகிறது. அடுத்தவர்கள் துன்பப்படுவரே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், வன்முறை மனநிலையில் உள்ளவர்களை, ஏ.எஸ்.பி.டி., எனும், 'ஆன்டிசோஷியல் டிசார்டர்' பாதிப்புள்ளவர்கள் என்கிறோம். சமீபத்தில் செய்தித்தாள்களில் வந்த, நாயை மாடியிலிருந்து துாக்கிப் போட்ட மருத்துவக் கல்லுாரி மாணவரின் செயல்கூட, நடத்தைக் கோளாறால் வந்தது தான். சிறு வயதிலேயே கூட, இப்பிரச்னை ஏற்படலாம். இப்பிரச்னை அதிகளவில் ஆண்களிடமே காணப்படுகிறது. இப்பாதிப்புள்ளவர்கள் சக மனிதர்கள் மட்டுமல்லாது, விலங்குகளிடம் கூட மூர்க்க குணத்தை காட்டுவர். பிரானேஷ் அந்நிலையில் தான் இருந்தான். ஐந்தறிவு ஜீவனை துன்புறுத்துகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருந்தான். இப்பாதிப்புள்ளவர்கள், ஒரு கட்டத்தில் வன்முறையாளர்களாக மாறிவிடுவர். இவர்களிடம் ஆளுமைக் குறைபாட்டோடு, நடத்தைக் கோளாறும் இருக்கும். தவறுகளிலிருந்து எந்த படிப்பினையையும் தெரிந்து கொள்ள மாட்டார்கள். சிகிச்சைக்கு வரவே, அவனுக்கு தனியாக 'கவுன்சிலிங்' அளித்தேன். எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்த பிரானேஷை நடத்தை மாற்று சிகிச்சை மூலம் சரிசெய்தேன். வெ.ராமானுஜம்மன நல மருத்துவர் வேலம்மாள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மதுரை98421 69996


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !