உறவு மேலாண்மை:தற்கொலை தீர்வு ஆகாது
அம்மா, டிபன் வேணாம்மா; ப்ளீஸ் என குழந்தை கெஞ்ச, ஒரே ஒரு இட்லி சாப்பிடணும்ன்னு ப்ளீஸ் செல்லம் என ரேணு கொஞ்ச, ஆ காட்டு என தன் குழந்தைக்கு டிபன் ஊட்டிவிட்டு, ஸ்கூல் வேனில் ஏற்றி டாட்டா காட்டும் போது ரேணு என்ன உளறுகிறாய் என, ரேணுவின் கணவர் சேகர் அதட்டினார். சட்டென துாக்கம் கலைந்து ரேணுவுக்கு. ரேணு என்னாச்சு, யாருக்கு டாட்டா சொல்லிட்டு இருக்க என்று சேகர் கேட்க, கனவில் நம் குழந்தைக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கிறேன் என விளக்கமளித்தார். ரேணு, ஒரு மருந்து கம்பெனியில் மேலாளராக இருக்கிறார். சேகர், தனியார் நிறுவனத்தில் விளம்பர பிரிவு தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருவரும், சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். 10ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள். சேகர், திடீரென்று ஒருநாள் தன் காதலைச் சொல்ல, ரேணுவும் சம்மதித்ததால் உடனே திருமணம் நடந்தது. குழந்தைப்பேறு தற்போது வேண்டாம்; சில வருடங்கள் ஆகட்டும் என தீர்மானித்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் கடந்த நிலையில் உறவினர்கள், நண்பர்கள், அலுவலக நபர்கள் என எல்லாரும், வீட்ல விசேஷம் இல்லையா என கேட்டு, நச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர். எதுக்கு தள்ளிப் போட்டு கிட்டு, குடும்பஸ்தானா ஆகப் பாருங்க என கூறினார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ரேணு அழுதே விட்டார்; தற்கொலைக்கு வேறு முயன்றார். டாக்டர்கிட்ட போலாங்க, எல்லா பரிசோதனையும் செய்யலாம்; உடனே குழந்தை பெத்துக்கலாம் என்று அழுதார். பொதுவாக குழந்தை பேறு தள்ளிப் போக காரணம், கருப்பையில் உண்டாகும் குறைபாடு கள், உயர் ரத்த அழுத்தம், அளவுக்கதிகமான பயணம், அதிக எடை, மன அழுத்தம் போன்றவையே. இவர்களின் பிரச்னைக்கு காரணம், உறவினர்கள் தந்த நெருக்கடியே. நிர்பந்தத்தோடு தாம்பத்ய உறவு கொள்ளும் போது ஹார்மோன் சமனற்ற நிலை ஏற்படுகிறது. இதனாலும் குழந்தை பேறு தள்ளிப் போகிறது. என்னிடம் கவுன்சிலிங்குக்காக வந்த போது இதுபற்றி விளக்கினேன். எங்களுக்கு குழந்தை பிறக்கலைன்னா, நீங்க சொன்னது போல் ஆதரவற்ற குழந்தைக்கு ஆதரவு அளிப்போம் என்றனர். வீட்டில் குழந்தை சத்தம் கேட்கலையே என்பவர்களுக்கு, இது விளையாட்டா இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு அது மனஉளைச்சலை தரும்.கா.மஞ்சுளா, மனநல ஆலோசகர், சென்னை