உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை: பேச மறந்த பெண்

அந்தப் பெண்ணிற்கு, 30 வயது. திருமணமாகி ஓராண்டு ஆகியிருந்த நிலையில், திடீரென்று ஒரு நாள், வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அருகில் இருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டியதில், முதலுதவி செய்த அவர், உடனடியாக ஒரு நரம்பியல் மருத்துவரிடம் அழைத்து செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.நரம்பியல் டாக்டர், தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் செய்து பார்த்து, உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் எதற்கும் ஒரு மனநல டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல, என்னிடம் வந்தனர். அந்தப் பெண்ணிடம் பேச முயன்றேன். அப்போது அருகில் இருந்த அவர் கணவர், 'இல்லை மேடம், கடந்த ஒரு மாதமாக, அவளுக்கு பேச்சு வரவில்லை. திடீரென்று நேற்று மயங்கி விழுந்து விட்டாள். அதன் பின்தான் டாக்டரிடம் போனோம்' என்றார்.இந்தப் பெண்ணை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கே, சில நாட்கள் ஆயின. நான் என்ன கேட்டாலும், முதலில் அமைதியாக இருந்தவர், அதன்பின் பதிலை எழுதிக் காண்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை, சகஜநிலைக்கு கொண்டு வந்தேன். கடைசியில், 'என் வாய் தான் இதற்கெல்லாம் காரணம். அதனால், இனி பேச வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்' என்று எழுதிக் காண்பித்தார்.விஷயம் இதுதான். கணவர், மாமியார் என்று சிறிய குடும்பம். கணவரை அவரின் அம்மா தனி ஆளாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இந்த பெண்ணையும், அவர் தான் முடிவு செய்து மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்தப் பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, அவ்வப்போது கணவருடன் தனியாக வெளியில் போய்வர வேண்டும் என்பது. முதல்முறை வெளியில் கிளம்பும்போது, மாமியார் ஏதோ தடங்கல் செய்ததால், போக முடியவில்லை. அடுத்த முறை, கிளம்ப ரெடியான நேரத்தில், 'தலை வலிக்கிற மாதிரி இருக்குப்பா' என்று சொல்ல, மகன் அம்மாவை கவனிக்கப் போய்விட்டார். அதற்கடுத்த முறை, மயக்கம் வருகிறது என்று சொல்ல, இப்படி ஒவ்வொரு முறையும் இவர்கள் கிளம்பும் நேரத்தில், ஏதோ ஒரு தடங்கல் செய்தார். பொறுமையிழந்த இந்தப் பெண், 'உங்க அம்மா நாம வெளியில் போகக் கூடாதுன்னே இதுமாதிரி செய்றாங்க' என்று கோபத்தில் கூற, 'அம்மா அப்படி எல்லாம் நினைக்க மாட்டார், நீ ஏன் இப்படி பேசறே?' என்று கணவர் கூற, வீட்டின் சூழ்நிலையே மாறிவிட்டது.'மகன் மேல் இருக்கும் அதீத பிரியத்தால், மாமியார் சில நேரங்களில் இப்படி நடந்து கொள்கிறாரே தவிர, அப்படி மோசமானவர் இல்லை; தன்னிடம் அன்பாகவே இருக்கிறார்; கணவரும் ரொம்ப நல்லவர்; தனக்கு கிடைத்த அற்புதமான வாழ்க்கையை, வெளியில் போக முடியவில்லை என்ற ஒரு விஷயத்திற்காக கோபமாகப் பேசி, இப்படி கணவரையும் மாமியாரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விட்டோமே... தன் வாய் தானே இதற்கு காரணம்' என்று தனக்குத்தானே தண்டனை கொடுப்பதாக நினைத்து, அவராகவே பேசாமல் வாயை மூடிக் கொண்டார். தொடர்ந்து கவுன்சிலிங் செய்ததில், இப்போது மெதுவாகப் பேச ஆரம்பித்து இருக்கிறார்.டாக்டர் லட்சுமி விஜயகுமார்மனநல சிறப்பு மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !