உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை: என்னோடு இருக்கும் இரண்டு தேவதைகள்

ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையனை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். வகுப்பில் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தையை, 'அடிக்கிறான், கிள்ளுகிறான்' என்பது, அவன் மீது அவர்கள் சொன்ன புகார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகின்றனர். இவன் ஒரே குழந்தை. பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், தனியாகவே இருக்க வேண்டும். பெற்றோரின் கவனிப்பும் போதுமானதாக இல்லை. இந்த சூழலில், தன்னை சுற்றி இருக்கும் கார், ஸ்கூட்டர், டிவி, என, பொருட்கள் மீது ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டான். அவற்றோடு பேசுவான். தன்னையொத்த குழந்தைகளோடு பேசுவதைவிடவும், பொருட்களிடம் சகஜமாகப் பேசுவான். குழந்தையின் குடும்பம், பள்ளி, அவன் தனித்திருக்கும் நேரங்கள் என, அவன் தொடர்புடைய அனைத்தையும் கேட்ட போது, விஷயம் தெளிவாகப் புரிந்தது. பெற்றோர் வேலைக்கு செல்வதால், இவனிடம் பேசுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற ஏக்கம், குழந்தையின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே, உடன் படிக்கும் குழந்தைகளை, 'அடிப்பது, கிள்ளுவது' என, இவனின் செயல்கள் இருந்திருக்கிறது. என்னை சந்தித்தபோதும் அவனாகவே என்னிடம், 'அங்கிள், என்கிட்ட ரெண்டு ஏஞ்சல்ஸ் இருக்காங்க.' அவங்கிட்ட நான் பேசுவேன்,' என்றான். இது குழந்தையின் தவறு இல்லை. அவனுக்கு என்ன தேவை என்பதை, அவன் பெற்றோரும் சரி, 'ஏன் பையனின் நடத்தை இப்படி இருக்கிறது' என்பதை ஆசிரியர்களும் புரிந்து கொள்ளவில்லை. பொதுவாக குழந்தைகளுக்கு, 'கவுன்சிலிங்' கொடுப்பதில்லை. பெற்றோருக்கு தான் கொடுப்போம். ஏன் இப்படி என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, பள்ளியில் இருந்து வந்தவுடன், அவன் தனியாக இல்லாமல், யாராவது வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி முடியாதபட்சத்தில், குழந்தைகள் காப்பகத்தில், சில மணி நேரங்கள் இருக்கட்டும். அலுவலகம் முடிந்து வரும்போது, அவனை அழைத்துக் செல்லுங்கள். விடுமுறை நாட்களில், அவனை வெளியில் அழைத்துச் சென்று, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, முடிந்த அளவு, அவனுடன் நேரத்தை செலவிட வேண்டியதன் அவசியத்தைக் கூறினேன்.அம்மா, அப்பா இருவரும், ஒரே நேரத்தில் குழந்தையோடு நேரத்தை செலவிட முடியவில்லை என்றால், குறைந்தபட்சம், யாராவது ஒருவராவது அவனோடு இருக்க வேண்டும். குழந்தையை தனிமையில் விடாமல், அவன் சொல்வதைக் கேட்டு, அவனோடு விளையாடி இருந்தால், நாளடைவில், பொருட்களோடு இருக்கும் இந்தப் பிணைப்பு மாறி, நார்மலாகி விடுவான்.செந்தில் குமார், மனநல ஆலோசகர்98401 07469


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !