உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை: புரிதல் அழகானதே

'விவாகரத்து பெறுவதற்கு முன், உங்களை ஒருமுறை சந்திக்கச் சொன்னார் எங்களுடைய வக்கீல்' என்று, என் முன் வந்தமர்ந்த தம்பதி சொன்னதைக் கேட்டதும், சற்று வியப்பாக இருந்தது. காரணம், என்னை சந்திக்க வரும் நோயாளிகள், பார்த்த உடனே தங்களின் பிரச்னைகளை கொட்ட ஆரம்பித்து விடுவர். இந்த தம்பதி, ஒரு வரி அறிமுகத்தோடு அமைதியாக இருந்தனர். இருவரும், இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எதுவும் பேசவில்லை. இருவருக்கும், 30 வயதுக்குள் தான் இருக்கும். திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆகியிருக்கிறது. அதற்குள், 'இனி சேர்ந்து வாழவே முடியாது' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். 'விவாகரத்து என்ற முடிவுக்கு ஏன் வந்தீர்கள்?' என கேட்டேன். அந்தப் பெண் சொன்னார். 'நாங்கள் இருவரும், ஒரே பொறியியல் கல்லுாரியில் படித்தோம். கல்லுாரி நாட்களில் இருந்தே காதலிக்கிறோம். படிப்பு முடிந்தவுடன் எங்களுக்கு ஐ.டி., துறையில் வேலை. எங்களது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணமான பின் தான் தெரிந்தது. எந்த ஒரு சிறிய விஷயத்திலும் எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகாது' என்றார். கணவரோ, 'நான் யாரோடு போனில் பேசினாலும் ஒரு விசாரணை. அலுவல் வேலையாக சற்று தாமதமாக வீட்டிற்கு வந்தால், 100 கேள்விகள். இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று, 1,000 கட்டுப்பாடுகள். என்னால் இயல்பாக வீட்டில் இருக்க முடியவில்லை' என்று சொன்னவரின் வார்த்தைகளில் பொறுமையின்மை, பதற்றம், இந்த சூழலில் இருந்தே தப்பித்து விட வேண்டும் என்ற அவசரம் எல்லாம் இருந்தது. நான் இருவரிடமும் பொதுவாக வைத்த கேள்வி இதுதான், 'ஒரு ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ முடியாத உங்களால், 5 ஆண்டுகள் எப்படி காதலிக்க முடிந்தது?'சில வினாடிகள் கனத்த மவுனத்திற்கு பின், இருவரும், மாறி மாறி, 'காதலித்த நாட்களில் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு அக்கறையாக இருந்தனர், விட்டுக் கொடுத்தனர், காத்திருந்தனர் என்று, சம்பவங்களோடு உணர்ச்சி மிகுதியாக சொன்னார்கள். 'ஒரு நபரின் முழுமையான ஆளுமை திருமணத்திற்குப் பின் தான் வெளிப்படும். நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். உங்கள் துணையால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு பின்னால் நியாயமான காரணம் இருக்கும் என்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தேவையற்ற கட்டுப்பாடுகள் யாரையும் எரிச்சல்படுத்தும். 'நம்பிக்கை இருந்தால் எதுவும் தேவையில்லை. புரிந்து கொள்ள ஆரம்பித்தால் அது நம்பிக்கையைக் கொடுக்கும். தவறாகப் புரிந்து கொள்வது வெறுப்பை அதிகரிக்கும். பரஸ்பர அன்பு போய்விடும். எந்த விஷயத்தையும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் புரிந்து கொள்வதே வாழ்க்கையில் அழகானது. 'நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தற்காலிகமாக இருவரும் பிரிந்து வாழுங்கள். சில நாட்களுக்காகவாவது எந்தத் தொடர்பும் வேண்டாம். அந்த சமயத்தில், உங்களின் மகிழ்ச்சியான தருணங்களை இருவரும் ஒவ்வொன்றாகப் பட்டியலிடுங்கள். இன்னொரு பக்கத்தில் பிரிந்து செல்வதற்கான காரணங்களையும் எழுதுங்கள். பிரிந்து போவதற்கு ஒரு காரணமும் அதில் இருக்கப் போவதில்லை' என்றேன். நம்பிக்கை இல்லாமல் தான் என் கிளினிக்கை விட்டுச் சென்றனர். ஆனால், சில வாரங்கள் பிரிந்து இருந்ததில் ஏற்பட்ட மாற்றம், கடந்த ஆறு மாதங்களாக காதலித்த நாட்களில் இருந்ததைவிடவும் மகிழ்ச்சியாக இருக்க வைத்திருக்கிறது.டாக்டர் இ.சிவபாலன்மனநல மருத்துவர். 99620 17274


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !