உள்ளூர் செய்திகள்

குழந்தைகளையும், முதியவர்களையும் பாதிக்கும் ஆர்.எஸ்.வி., வைரஸ்!

ஆர்.எஸ்.வி., எனப்படும் சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ், குழந்தைகளிலும், முதியவர்களிலும் நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வருடமும், ஆர்.எஸ்.வி. நோய்த்தொற்றால், ஐந்து வயதுக்கு கீழுள்ள 36 லட்சம் பேர் பாதிக்கப்படுவதும், 1 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து காற்று வழியாக தொற்று பரவுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட இரண்டு - எட்டு நாட்களில், அறிகுறிகள் தெரியும். ஆர்.எஸ்.வி., நோய்தொற்று, மேல் சுவாசப் பாதையை பாதித்தால், சளி, இருமல், தும்மல், லேசான காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். நுரையீரலை பாதித்தால், இருமல், மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். இரண்டு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளில், ஆர்.எஸ்.வி., வைரஸானது, நுரையீரலிலுள்ள சிறிய சுவாசக் குழாய்களில் அழற்சி ஏற்படுத்தி, வீக்கம், சளியை உண்டாக்கி, சுவாசத் தடையை ஏற்படுத்துகிறது. 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த, குறைபிரசவத்தில் பிறந்த, இதய, நுரையீரல் பிறவி குறைபாடு உள்ள குழந்தைகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, இவ்வைரஸ், நிமோனியா பாதிப்பை ஏற்படுத்தும். நோய்த்தொற்றின் அறிகுறிகள் மிதமாக இருந்தால், பரிசோதனைகள் தேவைப்படாது. மூக்கடைப்பை நீக்க, மூக்கு சொட்டு மருந்து தருவோம். குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தாய்ப்பால் தருவதை நிறுத்தக் கூடாது. மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், தாய்ப்பால் குடிக்க முடியாமல் போவது போன்ற தீவிர அறிகுறிகள் இருந்தால், உடனடியாக குழந்தையை, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மூலம் ஆர்.எஸ்.வி., நோய் தொற்றை உறுதிப்படுத்த முடியும். தீவிர பாதிப்பிற்கு செயற்கை சுவாசம் தேவைப்படலாம். ஆர்.எஸ்.வி. நோய் தொற்றிற்கு தடுப்பூசி உள்ளது. 75 வயதிற்கு மேலுள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், இதய, நுரையீரல் குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இத்தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசியின் விலை 40,000 ரூபாயாக இருப்பதால், அனைவராலும் போட்டுக் கொள்ள முடிவதில்லை. ஆய்வுகள் மூலம், விலை குறைந்த ஆர்.எஸ்.வி., தடுப்பூசிகளை உருவாக்கி, அதனை தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்த்தால், உயிரிழப்புகளை தடுக்க முடியும். டாக்டர் மு.ஜெயராஜ், குழந்தைகள் நல மருத்துவர்,இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி, புதுச்சேரி. 87785 33123jeyaraj.jeeva@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !