கனவு தவிர்... நிஜமாய் நில்! பெண்களை அதிகம் பிடிக்கும்!
நவ., 14, சர்வதேச நீரிழிவு தினத்திற்கான இந்த ஆண்டின் கருப்பொருள், 'பெண்களும் நீரிழிவும்.' 'வாழ்க்கை முறை மாற்றத்தால், வயது மற்றும் பாலின வித்தியாசம் இன்றி, அனைவரையும் பாதிக்கிறது நீரிழிவு. 'அப்படியிருக்க, 'பெண்களும் நீரிழிவும்' என, தனியாக ஏன் பார்க்க வேண்டும்?' என, கேட்கலாம்.காரணம் இருக்கிறது... முதலாவது, உடற்கூறியல்படி பார்த்தால், ஆண்களை விட, பெண்களை, அதிதீவிரமாக பாதிக்கிறது நீரிழிவு. இதற்கு காரணம், மாறி வரும் வாழ்க்கை முறையில், வீடு மற்றும் வேலை என்ற இரண்டு பெறுப்புகளையும் சுமப்பது பெண்கள். பெண்கள், எப்போதும், வீட்டில் இருக்கும் பழக்க வழக்கத்திற்கு தகுந்த விதமாகவும், வெளியில் எதிர் கொள்ளும் சூழலுக்கு ஏற்ப, இன்னொரு விதமாகவும், 'பேலன்ஸ்' செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது; இதனால், மன அழுத்தம், பதற்றம் வருகிறது. நம் நாட்டில் மட்டும் கிடையாது. உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டால், தான் சார்ந்து இருக்கும் குடும்பத்தின் தேவைகளை கவனிப்பது, அக்கறையுடன் பார்த்துக் கொள்வது, பெண்களின் பொறுப்பாகவே உள்ளது. உணவு தயாரிப்பதில் துவங்கி, ஒவ்வொரு விஷயத்தையும், மற்றவர்களுக்காக செய்யும் பெண்களுக்கு, தங்களைப் பார்த்து கொள்ள நேரம் இருப்பதில்லை.கடந்த, 20 ஆண்டுகளில், கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு, நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு, குழந்தை பெற்ற, 2.7 கோடி பெண்களில், 16 சதவீதம் பேர், நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களில், 60 சதவீதம் பேர், குழந்தை பெற்ற ஐந்து ஆண்டிற்குள், நிரந்தர நீரிழிவு பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இதற்கு பொதுவான காரணங்கள், இளம் வயதில் அதிக உடல் பருமன், போதிய உடலுழைப்பு இல்லாதது, கொழுப்பு, உப்பு அதிகம் சாப்பிடுவது போன்றவை. இதை விட முக்கிய காரணம், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வது. கருப்பையில் வரும் நீர்க்கட்டி, 'பைப்ராய்டு' கட்டிகள் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால், குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. தவிர, பரம்பரை காரணிகளாலும், நீரிழிவு பிரச்னை பெண்களுக்கு வருகிறது.டாக்டர் உஷா ஸ்ரீராம் நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு நிபுணர், சென்னை.drushasriram@gmail.com