ஆண் குழந்தைகளை பாதிக்கும் திக்குவாய்!
குழந்தைகள் பேசும் போது கோர்வையாக பேச திணறுவதை திக்குவாய் அல்லது பேச்சு திணறல் என்கிறோம். பொதுவாக குழந்தைகள் பேச கற்றுக் கொள்ளும் போது அவர்களின் பேச்சுத்திறன் முழு வளர்ச்சி அடையும் முன்பாக, ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து பேசும் போது, பேச்சு திணறல் அல்லது திக்குதல் ஏற்படலாம். குழந்தை வளர வளர, பேச்சுத்திறன் முழு வளர்ச்சி அடையும் போது, தானாகவே சரியாகிவிடும். இதை, 'டெவலெப்மென்டல் டிஸ்ப்ளுயன்சி' என்பர். பொதுவாக இரண்டு, -மூன்று வயது குழந்தைகள் இடையே, இவ்வகை பேச்சு திணறல் காணப்படும். பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளிடம் நான்கு மடங்கு அதிகம் காணப்படுகிறது. பெற்றோருக்கு பேச்சு திணறல் இருந்தால், குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வர மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள் குழந்தைக்கு குழந்தை மாறுபடும் * ஒரு வார்த்தையின் முதல் ஒலியை திரும்பத் திரும்பச் சொல்வது. * வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்வது. * வார்த்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி. * ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்துதல். * பேசும்போது கண் இமைகளை சிமிட்டுதல், முகத்தசைகள் சுருக்குதல் அல்லது பெருமூச்சு விடுதல். * குழந்தையின் மனநிலை பாதிப்புகள். * மன அழுத்தம் மற்றும் இறுக்கமான சூழல்கள், பேச்சு திணறலை அதிகப்படுத்தலாம். * திக்குதல் அதிகமாகும் போது, குழந்தை அதை உணர ஆரம்பித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகிறது. * இதனால் மற்றவர்கள் முன்பாக பேசுவதை தவிர்ப்பது, விரக்தி மனநிலை மற்றும் மன ஊக்கம் குறைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். * சக குழந்தைகளின் கேலி கிண்டலுக்கு ஆளாகி, பள்ளி செல்வதையே வெறுக்கத் தொடங்குகின்றனர். * இதில் கவனிக்க வேண்டியது, பாடும் போது, செல்லப் பிராணிகளுடன் பேசும் போது, குழந்தைகள் பொதுவாக திக்குவதில்லை. * மருத்துவ ஆலோசனை எப்போது தேவை? பேச்சுத்திணறல் உடைய குழந்தைகள் பொதுவாக நல்ல அறிவுத்திறனோடு இருப்பர். எனினும், ஐந்து வயதிற்கு மேல் திக்கினால்; வயது வேறுபாடின்றி, தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக பேச்சுத்திணறல் இருந்தால்; ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி எனப்படும். இயல்புக்கு மாறான அதீத சுறுசுறுப்பு, செவித்திறன் குறைபாடு போன்ற பாதிப்புகளுடன் திக்குவாய் பிரச்னையும் இருந்தால், மருத்துவ ஆலோசனை அவசியம். சிகிச்சை குழந்தை நல மருத்துவர், வளர்ச்சி மற்றும் நடத்தை சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். டாக்டரின் ஆலோசனைப்படி, பேச்சு பயிற்சியாளர், பயிற்சி தருவார். தாமதிக்காமல் பயிற்சியை ஆரம்பித்தல், சிறப்பான பலன் கிடைக்கும். குழந்தைக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்கித் தர வேண்டியது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. பிற குழந்தைகளோடு பழகவும், விளையாடவும் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தையின் மன தைரியத்தை அதிகரிப்பது அவசியம். டாக்டர் ச. பெருமாள் சத்யா,குழந்தை வளர்ச்சி மற்றும் நடத்தை சிறப்பு மருத்துவர்,ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை,சென்னை93632 79687 drsathya@rainbowhospitals.in