ஆயிரம் முறை விழுங்குவதால் ஆரோக்கியமாக இருக்கிறோம்!
பக்கவாதம் உட்பட மூளை தொடர்பான கோளாறுகள் ஏற்படும் போது, உயிரிழப்பு நிகழ்வதில்லை. ஆனால், பாதிப்பின் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாசக் கோளாறு - நிமோனியா, சிறுநீரகக் கோளாறுகளால் தான் பெரும்பாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.மூளையில் அடிபட்டு அல்லது வேறு காரணங்களால் பாதிப்பு வந்த ஒருவர் சுய நினைவை இழக்கும் போது, உடனடியாக அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பது. இயல்பாக அவரால் விழுங்க முடியாத நிலையில், நீர் சுவாசப் பாதையில் சென்று அழற்சியை ஏற்படுத்தி நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.ஒரு நாளில் 1,500 முறை எச்சில் உட்பட சுயநினைவோடும், தன்னிச்சையாகவும் விழுங்குகிறோம். அப்படி செய்யாத பட்சத்தில், எச்சில் சுவாசக் குழாயினுள் சென்று நிமோனியாவை ஏற்படுத்தும். சுய நினைவை இழக்கும் ஒருவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் போது அவரின் முயற்சி எதுவும் இல்லாததால், சுவாசக் குழாயினுள் சென்று இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.விழுங்குவதில் சிரமம் இருக்கிறதா என்பதை தெரிந்த பின்பே, எதையும் தர வேண்டும். வாய் வழியே தன்னிச்சையாக எச்சில் வடிவது, பேசுவதில் சிரமம், குடிக்க, சாப்பிட கொடுத்தவை முழுதும் உள்ளே செல்லாமல், வாய், பற்களில் அப்படியே தங்கி இருப்பது... இவை, பக்கவாதம் வந்திருப்பதற்கான அறிகுறிகள். சாப்பிட, குடிக்க எதுவும் தராமல் உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். பக்கவாதம் வந்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு விழுங்குவதில் சிரமம் இருக்கும். பக்கவாதம் வந்த அனைவரும் சுய நினைவு இழப்பர் என்று செல்ல முடியாது. சுய நினைவோடு இருக்கும் பட்சத்தில் குடிக்க, சாப்பிட கொடுத்தால், பாதித்தவரை உட்கார வைத்து தர வேண்டும். கால்களில் கனமாக உணர்வது, கைகளை துாக்க சிரமப்படுவது, நடக்கும் போது ஒரு பக்க கால் பலமிழந்து தடுமாறுவது, வார்த்தைகள் குழறுவது... இவை பக்கவாதம் வருவதற்கான ஆரம்ப நிலை அறிகுறிகள்.பக்கவாதம் வந்ததில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட உடல் பருமனால், அனைத்து நோய்களையும் போன்று பக்கவாதமும், 17 - 20 வயதினருக்கு வருவதையும் பார்க்கிறோம். டாக்டர் ஜாய் வர்கீஸ்,நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை,சென்னை.