புன்முறுவலுக்கு பின் இருக்கும் மின் துடிப்புகள்!
மூளை, முதுகுத்தண்டு மற்றும் புற நரம்புகள் அனைத்தும், முழுமையான மின் சுற்றை போன்று செயல்படுகின்றன. இயற் கையாகவே மனித உடலில், மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு உள்ள மின்சார கட்டமைப்பு இது. இதில் மின் துடிப்புகள் உருவாகி, நரம்புகள் மூலம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று, உடலை இயக்குகிறது. இந்த இயக்கம் நம்முடைய விருப்பப்படியும் நடக்கலாம் ; தன்னிச்சையாகவும் இருக்கலாம். உடலின் இயக்கம் பல வேதியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் உந்தப்பட்டாலும், இறுதியில் அனைத்து செயல்பாடுகளும் நரம்புகள் வழியாக கடத்தப்படும் மின் துடிப்புகள் மூலமே செயல்படுத்தப்படுகிறது ; கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு புன்முறுவலுக்கு பின்னும், ஒரு முக சுளிப்புக்கு பின்னும் கோடிக்கணக்கான மின் துடிப்புகள் கடத்தப்பட்டு கொண்டு இருக்கும். மின் அதிர்வுகளின் உருவாக்கமும் பரிமாற்றமும் மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த அதிர்வுகளில் ஏற்படும் சிறிய மாற்றமும், உடலின் செயல்பாடுகளில், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகி ற து. இந்த மின் அதிர்வுகளை பதிவு செய்வதன் மூலமே, இதயம், மூளை மற்றும் தசைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஈ.சி.ஜி., - ஈ.ஈ.ஜி., - ஈ.எம்.ஜி., ஆகிய பரிசோதனைகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. சில நேரங்களில், நம் வீடுகளுக்கு வரக்கூடிய மின் அழுத்தத்தில் ஏற்ற தாழ்வுகள் எற்படும்போது, வீட்டில் உள்ள விளக்குகள் மின்னி மின்னி எரிவதை கவனித்து இருப்போம். அதே போல் தான் மூளையில் உள்ள மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டால், உடலில் பல்வேறு அசாதாரண நிகழ்வுகள் ஏற்படும். அவற்றில் , கை - கால்களில் நடுக்கம், வாயில் நுரை தள்ளுதல், சிறுநீர் கட்டுப்பாடில்லாமல் வெளியேறுவது மற்றும் சுய நினைவு இழத்தல் போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்கள். இதைத் தான் வலிப்பு நோய் என்று சொல்கிறோம். மூளையில் ஏன் இந்த மின் மாற்றம்? மூளையில் ஏற்படும் நோய் தொற்று, தலையில் அடிபடுதல், கட்டி, வேறு நோய்களால் நிகழும் சில வேதியல் மாற்றங்கள் மற்றும் சில மரபியல் காரணங்கள் இந்த மின் அழுத்த மாறுபாட்டை ஏற்படுத்தும். மூட நம்பிக்கைகள் காலில் காப்பு கட்டுவது, இரும்பு சாவி கொடுப்பது, முகத்தில் தண்ணீர் தெளிப்பது போன்றவை வலிப்பு நோய்க்கான சிகிச்சைகளாக இன்றும் பல இடங்களில் உள்ளன. இவற்றிற்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை. எந்த சிகிச்சையும் தராத நிலையிலும், சில நிமிடங்களுக்கு பின் மின்ஆற்றல் சீராகி, நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். பின் எதற்கு சிகிச்சை? நோயாளி சுய நினைவின்றி இருக்கும் நேரத்தில், வேறு வித பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், திரும்ப திரும்ப வலிப்பு வரும் போது, மூளை சேதம் அடையாமல் இருக்கவும், சிகிச்சை அவசியம். வலிப்பு வந்த நபரை பார்த்து, அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவரை காற்றோட்டமுள்ள இடத்தில் படுக்க வைத்து, அருகில் கூர்மையான பொருட்கள் இருந்தால் அகற்றி விட வேண்டும். தலையை பக்கவாட்டில் திருப்பி வைக்க வேண்டு ம், வாயில் எதையும் வைக்கக் கூடாது. தண்ணீர் கொடுக்க வேண்டாம். தொடர்ந்து சிகிச்சை பெற்றால் வலிப்பு என்பதே இல்லாமல், இயல்பான வாழ்க்கை வாழ முடியும். மருத்துவ சிகிச்சையால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பை, அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடி யும். டாக்டர் கல்பனா பெருமாள், உதவி பேராசிரியை, நரம்பியல் துறை, மருத்துவக் கல்லுாரி, கன்னியாகுமரி 72002 13625dr.kalpanaperumal@gmail.com