உள்ளூர் செய்திகள்

ஈறு தான் பல்லுக்கு வேரு

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள், எளிதில் ஜீரணமாக, அவற்றை நன்றாக அரைத்து உட்கொள்வதில் முக்கிய பங்கு பல்லுக்கு உண்டு. இத்துடன், முக அழகுக்கும், பொலிவுக்கும், பேசவும், பற்கள் முக்கியமானதாக உள்ளன. உடலை நோய் தாக்காமல் இருக்க, உடலின் நுழைவாயிலாக திகழும் வாய் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பற்களின் பாகங்களில், அதிகம் பாதிக்கக் கூடியது, பற்களை சுற்றியுள்ள ஈறுகள் தான். ஈறுகள் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் போன்றவை ஈறுநோய்க்கான அறிகுறிகள்.ஈறுக்கும், பற்களுக்கும் இடையே, இயற்கையாகவே சிறிது இடைவெளி இருக்கும். ஈறுநோய் பாதிப்புக்குள்ளாகும்போது, இந்த இடைவெளி மேலும் பெரியதாகி விடும். இதில், பாக்டீரியாக்கள், பாக்டீரியாவால் வெளியேறும் விஷப் பொருட்கள் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி, ஒரு பள்ளம் போல் மாறி விடும். இதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம் தான், பற்களின் ஈறு மட்டுமின்றி, பல் பிடிப்புக்கு காரணமாக உள்ள எலும்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன; பற்களில் அசைவு ஏற்பட்டு, தானாகவே அவை விழும் நிலை ஏற்படுகிறது. 'பிளாக்' என்ற வெண்படலம், பற்களின் ஈறுகளை சுற்றி படர்கிறது. இதை வளர விடும் போது, கறையாக மாறி விடுகிறது. எனவே, ஈறு நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள, ஆண்டுக்கு ஒருமுறை பற்களை சுத்தம் செய்து கொள்வதுடன், பற்கறையை அகற்றி பாதுகாக்க வேண்டும். மேலும், 'அல்ட்ரா சோனிக் ஸ்கேலர்' என்ற நவீன கருவியால், பற்களை சுத்தம் செய்து கொள்ளலாம். காலை, மாலை பல் துலக்கி, பற்களையும், ஈறுகளையும் பாதுகாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !