உள்ளூர் செய்திகள்

கொழுப்பு படிந்தால் மாற்று கிடைக்காது!

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், வேறு வழியே இல்லாத நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிபாரிசு செய்யப்படும். 10 ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால், எத்தனை சதவீதம் வெற்றி பெறும் என்ற சந்தேகம் இருந்தது; தற்போது இந்த நிலை முற்றிலும் மாறி விட்டது.நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில், பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர், வழக்கம் போல வேலைக்கு செல்லலாம். குழந்தையாக இருந்தால், பள்ளிக்கு செல்லலாம்.சிகிச்சைக்கான செலவும், 40 லட்சம் ரூபாயில் இருந்து பாதியாக குறைந்து விட்டது. நம் மாநிலத்தில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டில் சேர்க்கப்பட்டு உள்ளது. தானம் தருவதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன், மூளை சாவு அடைந்தவர்களிடம் அல்லது யாராவது தானம் செய்வரா என்று காத்திருக்க வேண்டி இருந்தது.ஒரு பகுதி கல்லீரலை வெட்டி எடுத்தால், வளரும் தன்மை கொண்டது என்ற புரிதல் வந்து விட்டதால், குடும்ப உறுப்பினர்களே தானம் செய்ய முன் வருகின்றனர். கடந்த ஆண்டு, 106 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை எங்கள் மையத்தில் செய்ததில், 101 பேருக்கு குடும்ப உறுப்பினர்களே தானம் தந்து விட்டனர்.ஒரே ரத்த வகை, திசு இருப்பவர்களின் கல்லீரலை மட்டுமே தானமாகப் பெற முடியும். மாறுபட்ட ரத்த வகை, திசுவை தானம் பெற்றவரின் உடல் நிராகரித்து விடும். தானம் பெறுபவரின் உடல் அதை நிராகரிக்காமல் இருக்க, அறுவை சிகிச்சைக்கு முன், இரண்டு வாரங்கள் பிரத்யேக மருந்துகள் தந்து, தானம் பெறுபவரை தயார்படுத்த முடிகிறது.மதுவால் மட்டும் கல்லீரல் செயல் இழப்பதில்லை. முறையற்ற உணவுப் பழக்கதால், 'பேட்டி லிவர்' எனப்படும், கல்லீரலில் கொழுப்பு சேருவதாலும் பிரச்னை வரலாம். அவரவரின் உடல் எடைக்கு ஏற்ப கல்லீரல் இருக்கும் என்பதால், உடல் பருமனால் கல்லீரல் செயலிழந்தால், மாற்று கல்லீரல் கிடைப்பது கடினம். 100 கிலோ உடல் எடையுடன் இருந்தால், அவரின் கல்லீரல் ஒண்ணரை கிலோ எடையுடன் இருக்கும். இதில், 80 சதவீதம் கெட்டு விட்டால், குறைந்தது, 800 கிராம் கல்லீரலை தானமாக பெற்று பொருத்த வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில், அவரின் பழைய கல்லீரலின் அளவில் 80 - 90 சதவீதம் வளர்ந்து விடும்.இவர் அளவு உடல் எடை இல்லாத அவரின் குடும்ப உறுப்பினர்கள், 500 கிராம் கல்லீரலை தானமாக தந்து, அதைப் பொருத்தினால், 100 சதவீதம் தோல்வியில் முடியும். முழு வளர்ச்சி பெற்றாலும், 1 கிலோ தான் வளரும்; அவரின் எடைக்கு போதாது. நோயாளி இறந்து விடுவார். அதனால், 'ரிஸ்க்' எடுக்கத் தயங்கினோம். இப்போது, குடும்ப உறுப்பினர்கள் இருவரிடம் இருந்து தானமாக பெற்று, ஒருவருக்கு பொருத்துகிறோம்.பிறந்த குழந்தைக்கு மாற்று கல்லீரல் பொருத்துவதிலும் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கல்லீரல் கேன்சர் நோயாளிகள், ஆறு மாதம் வரை உயிர் வாழ முடியும் என்ற நிலை மாறி, பிரத்யேக 'ரேடியோ தெரபி, இம்யூனோதெரபி, லோகோ ரீஜினல் தெரபி' என்று பல சிகிச்சைகள் நல்ல பலனைத் தருகின்றன. கீமோ தெரபியில் இருக்கும் பக்க விளைவுகள் இதில் இல்லை.டாக்டர் ஜாய் வர்கீஸ்கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,குளோபல் மருத்துவமனை, சென்னை97911 66081


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !