உள்ளூர் செய்திகள்

மாத்தி யோசி

ஒற்றை தலைவலி, புற்றுநோய்...

காய்கறிகளில் ரசாயன பொருள்கள் கலந்துள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது: இன்று, நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு உணவுப் பொருள்களில் அளவுக்கு அதிகமாக கலந்திருக்கும் ரசாயனம், ஒரு முக்கிய காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. இதனால் கீழ்க்கண்ட உபாதைகள் ஏற்படும். * வயிற்றுப் போக்கு ஏற்படும்.* இரைப்பையில் தொற்று நோய்கள் ஏற்படும்.* தொடர்ந்து சாப்பிடும் நிலையில், கல்லீரலும் பாதிக்கப்படும்.* இந்த பழங்கள் விரைவில் கெட்டுப் போய்விடும். கெட்டுப்போன பழங்களை சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் வருவது நிச்சயம்.* குளிர் பதன கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் பழம், காய்கறிகளில் தெளிக்கப்படும் ரசாயனம், அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். ஞாபக மறதி ஏற்படும். நாளடைவில் மரபணு குறைபாடுகளை உருவாக்கி, பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கவும் வாய்ப்புள்ளது.* வேறு சில ரசாயனங்கள் ஒற்றை தலைவலி, மன அழுத்தம், புற்றுநோய், 'பார்கின்சன்' நோய் என பல்வேறு நோய்களுக்கு காரணமாக உள்ளன. எனவே, பயிர்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். காய்கறிகள், பழங்களைச் சேமித்து வைக்க குறிப்பிட்ட அளவு மட்டுமே ரசாயனம் பயன்படுத்துகிறது என்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

சுகருன்னா சூப்பர் ஆக்டிவ்? :

சர்க்கரை கலந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடும் குழந்தைகள், அளவுக்கு அதிகமாக, சேட்டையில் ஈடுபடுவர் என, நம்பப்படுகிறது. இது தவறு. அமெரிக்கக் குழந்தை நல மருத்துவர்கள் இருவர், இதற்கென 'ரூம் போட்டு' ஆராய்ச்சி செய்தனர். செயற்கை இனிப்பு, இயற்கை இனிப்பு என, பல பலகாரங்களை தயார் செய்து, பல பிரிவு குழந்தைகளைக் கூப்பிட்டு, ஒரு பிரிவினருக்கு, 'துக்கியூண்டு' இனிப்பு, வேறொரு பிரிவு குழந்தைக்கு அதிக இனிப்பு, மூன்றாவது பிரிவினருக்கு, அவர்களுக்குப் பிடித்த அளவிலான இனிப்பு கொடுத்து பரிசோதித்தனர். மூன்று பிரிவினரும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில், படு சேட்டையில் ஈடுபட்டு, மருத்துவர்களைத் திக்கு முக்காடச் செய்து விட்டனர். உண்மை, 'மண்டையில் அறைய' ஒரு முடிவுக்கு வந்தனர். 'மச்சி... எல்லாரும், 'டுபாக்கூர்' உடுறாங்கவே... குழந்தைங்களோட, 'பேரன்ட்ஸ' கூப்பிட்டு விவரத்தைச் சொல்லுவோம்' என, முடிவு செய்து அழைத்தனர். இனிப்பு, 'துக்கியூண்டு' கொடுக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்க, அவர்களின் பெற்றோரை அழைத்தனர். குழந்தைகள் துள்ளி விளையாடுவதைப் பெற்றோர் பார்த்தனர். இதே போல், ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோர் நோக்க, ஆச்சரியம் தாங்கவில்லை. எனவே, குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், சுட்டி சுட்டி தான்!

பிறவிக் குறைபாடு ஏன்?:

தாயின் கர்ப்பப் பையில் நோய், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று அல்லது குரோமோசோம் குறைபாடு ஆகியவற்றால், குழந்தையின் இதயம், குடல், காது, விரல்கள் உள்ளிட்ட உறுப்புகள் இயற்கைக்கு மாறாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தை பிறப்பின் போதோ அல்லது அதன் பிறகோ, இது கண்டறியப்படுகிறது.

மூன்றும், பன்னிரெண்டும்!:

தாயின் வயிற்றில் கரு வளரும்போது சில மருந்துகள், எக்ஸ் - ரே, நோய் தொற்று, உணவுப் பற்றாக்குறை, அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றால், உறுப்பு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம். 3 வாரத்திற்கு முன் பாதிப்பு ஏற்பட்டால், கருச் சிதைவு ஏற்படும். 12 வாரத்திற்கு மேல், தாக்குதலை எதிர்கொள்ளும் திறனை கரு பெற்று விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !