சேமிக்க மறந்த முதியோருக்கு... கைகொடுக்கிறது இந்த நிதியுதவி
பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணிக்கும் பல பெற்றோர், தங்களின் முதுமைக்கால சேமிப்பை திட்டமிட தவறிவிடுகின்றனர்.இந்தியாவில் உள்ள முதியவர்களில் 65 சதவீதத்தினர் நிதி ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நிதி சுதந்திரம் இல்லாத முதியவர்களில் பெரும்பாலோர், அன்றாட வாழ்வில் பாதுகாப்பின்மை, மனவேதனை மற்றும் சமூகத்தில் கண்ணியமற்ற சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவ செலவுகள் என பெற்றோரின் ஓட்டம் ஓய்வின்றி தொடர்கிறது. பரபரப்பான ஓட்டத்தில், தங்களின் முதுமைக்கால தேவைகளுக்காக சேமிக்க மறந்து விடுகின்றனர்.வயதான காலத்தில் சிறிய தேவைகளுக்காக பிள்ளைகளை எதிர்பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. இது அவர்களுக்கு மனஅழுத்தத்தை அளிக்கிறது. முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து சமூகப் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் கூறுகையில், '60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு தகுதி அடிப்படையில் மாதம் ரூ.1,200 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், ஆதரவற்றவராகவும் இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், 60 வயது பூர்த்தியானதற்கான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று (வாக்காளர் அட்டை அல்லது மின்சார கட்டண ரசீது), வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், வேறு அரசு நிதியுதவி பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்' என்றனர்.தகுதியுள்ள முதியோர் அருகில் உள்ள இ--சேவை மையங்கள், வட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகலாம்.