தண்ணி அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்
'தினமும் மதுபானம் அருந்துவோருக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின், துாக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டு விடும். இந்த துாக்கமின்மை பாதிப்பு, மாதக்கணக்கில், ஆண்டு கணக்கில் நீடிக்கவும் வாய்ப்பு உண்டு' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தினமும் மது குடித்தால் தானே, இந்தப் பாதிப்பு, அதை நிறுத்தி விட்டால் துாக்கம் வந்து விடுமே என, நினைத்து, மது குடிப்பதை நிறுத்தியவர்களுக்கும், சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு, துாக்கமின்மை பாதிப்பு தொடரும். குறிப்பாக, இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவழியினருக்கும், இந்த வகை பாதிப்பு அதிகம் வரலாம் என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துவ பல்கலைகழக விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளதாவது:தினமும் மது அருந்துவோருக்கு, மூளைக்கு செல்லும் நரம்புகளிலும், மூளையின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் செல்களிலும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, துாக்கத்தை முறையாக வரவழைக்கும், உடலின் இயக்க முறைகளில் பாதிப்பு ஏற்படும்.மேலும், நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக மது அருந்தும் போது, அந்த மதுபானங்களில் உள்ள ரசாயனங்கள், அவற்றின் செயல்பாடுகளும், நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை பாதிக்கின்றன. ஆரம்பத்தில் மதுபானங்களில் உள்ள ரசாயனங்களால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கின்றது. பின், அதுவே பாதிப்பை ஏற்படுத்தி, துாக்கமின்மையை ஏற்படுத்தி விடுகிறது.இப்படிப்பட்டவர்களுக்கு மூளையின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க, தேவையான மருந்துகளை அளிப்பதன் மூலம், துாக்கமின்மை பிரச்னையை போக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.