உள்ளூர் செய்திகள்

உப்பில்லாத பண்டம் தோலுக்கு!

சருமப் பிரச்னைகளில், 'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' எனப்படும் நம் நோய் எதிர்ப்பு செல்கள் நமக்கு எதிராக வேலை செயவதால் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று சோரியாசிஸ். தாங்க முடியாத அரிப்பை ஏற்படுத்தி, பல அசவுகரியங்களை தரும். இதில், பல வகைகள் இருந்தாலும் தொற்று நோய் கிடையாது.சோரியாசிஸ் இருந்தால் வியர்க்காது. இதுவே பிரச்னையாகி விடுகிறது. பிரச்னை இருப்பவர்கள், வெயிலில் போகக்கூடாது என்பது தவறு. சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா 'ஏ, பி' கதிர்கள், உடலில் உள்ள செயலிழந்த செல்களை நீக்கி, புது செல்கள் உருவாக்கத்திற்கு உதவி செய்கிறது. குறிப்பாக, வியர்வை சுரப்பியில் உள்ள துளைகளை விரிவடையச் செய்து, கழிவுகளை வெளியேற்றுகிறது. எனவே, இயற்கை மருத்துவத்தில் சோரியாசிஸ் பிரச்னைக்கு வாழை இலை குளியல் தருகிறோம். மண் சிகிச்சையும் இதற்கு நல்ல பலன் தரும். இது தவிர, 'அப்பியங்கம்' எனப்படும் எண்ணெய் குளியலும் சிகிச்சையில் ஒரு அங்கம். நல்லெண்ணெயுடன் கிருமி நாசினியாக செயல்படும் 'டி 3' எனப்படும் வாசனை எண்ணெயை கலந்து உடல் முழுதும் தடவி, சூரிய ஒளியில் 20 நிமிடங்கள் நின்ற பின் குளித்தால், தோலின் வறட்சி குறையும். இயற்கையாக உள்ள இளநீர், மோர் உட்பட நீராகாரங்களை அதிக அளவில் எடுப்பது மிகவும் அவசியம். இது கழவுகளை வெளியேற்ற உதவும்.இத்துடன் குடலை சுத்தம் செய்யக் கூடிய 'கோலன் ஹைட்ரோ தெரபி' சிகிச்சை தருவோம். இதனால், சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் சரியான முறையில் அணுக்களுக்கு சென்று, ஆரோக்கியமாக செயல்பட உதவும். உடல் முழுதும் சீரான முறையில் சக்தியை பரவச் செய்ய, அக்யூ பங்சர் தெரபியும் அவசியம். வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க வேண்டும்.கடந்த 2020ல் நடத்தப்பட்ட ஆய்வில், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு குறைந்து இருப்பதும், சோரியாசிஸ் அதிகமாவதற்கு காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டது. எனவே, பால், தயிர், புளித்த மாவில் செய்த இட்லி உட்பட புரோ பயாடிக் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 2021ல் நடத்திய ஆய்வில், உணவில் தொடர்ந்து மஞ்சள் பயன்படுத்துவதால், அழற்சியை போக்கி, தோல் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலையில், ஒரு டம்ளர் மோரில், சுத்தமான கற்றாழை கூழ், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம். அரிப்பு விரைவாகக் குறையும். வேப்பிலை, கஸ்துாரி மஞ்சள், காற்றாழை கூழ், குப்பைமேனி சேர்த்து கலந்து உடலில் தடவலாம். இவை அனைத்தையும் விட முக்கியம், உணவில் உப்பு சேர்க்கவே கூடாது. உப்பின் அளவிற்கேற்ப பிரச்னை அதிகமாகும். முடிந்தவரை உப்பில்லாத உணவையே சாப்பிடலாம். பதப்படுத்திய, பொரித்த, பேக்கரி உணவுகளை சாப்பிடவே கூடாது. ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் உள்ள மத்தி மீன் தினமும் சாப்பிடலாம். மன அழுத்தத்தை குறைக்க, நிறைய யோகா பயிற்சிகள் உள்ளன. அதில், உடலை சுத்தம் செய்யக்கூடிய கிரியா யோகங்கள் உள்ளன. 'லகுசங்கபிரக்சலனா' என்ற கிரியா யோகாவில், வாயில் துவங்கி மலக்குடல் வரை சுத்தம் செய்யக்கூடிய முறை. இதை, டாக்டரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும். இதை செய்யும் போது மன அழுத்தம் குறைந்து, சோரியாசிஸ் பிரச்னையில் இருந்து எளிதாக வெளியில் வரலாம்.டாக்டர் ஒய்.தீபா, கையால் சிகிச்சை அளிக்கும் 'மேனுபுலேட்டிவ் தெரபி' துறை தலைவர்,அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !