உடலில் அரிப்பு என்ன காரணம்?
மழைக் காலத்தில் உடலில், அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு என, பல இடங்களில் அரிக்கும். வியர்வை அல்லது உடலில் இருக்கும் ஈரப்பதத்தில், ஏராளமான பூஞ்சைக் கிருமிகள் வளர ஆரம்பிப்பதே இதற்கு காரணம். பூஞ்சைக் கிருமிகள் தோலைப் பற்றிக் கொண்டு தங்கள் இனத்தைப் பெருக்கி, வளர துவங்கி விடும். பூஞ்சையின் ஒவ்வாமையால் தோலில் தோன்றும் அரிப்பை கட்டுப்படுத்த, நாம் சொறிவதால் தோலில் ரத்தக் காயங்கள் உண்டாகி, கிருமிகள் இன்னும் செழிப்பாக வளரும். கிருமிகளை அழிப்பதும், கட்டுப்படுத்துவதும் மிகவும் சிரமம். ஏனெனில், ஒருவரிடமிருந்து அந்த கிருமிகள் அழியும் முன், குறைந்தது, ௧௦ பேருக்காவது, பரவி விடும். ஆகவேதான் பூஞ்சையால் தோன்றும் கிருமித் தொற்று, வீட்டில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவுகிறது. விடுதியில் படிப்போர், பழைய சுத்தமில்லாத ஈரத்துணியை அணிவோர், நீண்ட நேரம் உள்ளாடைகளை மாற்றாமல் அணிவோர், ஒரே உடையை மாற்றி அணிவோர், பிறரின் அழுக்குத் துணிகளையும் சேர்த்து, ஒன்றாகத் துவைத்து பயன்படுத்துவோர் ஆகியோருக்கு, பூஞ்சைகளின் தொற்று உண்டாகிறது. இதை தவிர்க்க விரும்புவோர், உடம்பை நன்கு சுத்தமாக தேய்த்துக் குளிக்க வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். ஜெ. சார்லஸ், சரும நிபுணர், சென்னை.