ஒரு பக்கமாக சிரித்தால் என்ன öŒ#வது?
* எனது பல் நடுவில் சதை வளர்கிறது. பிரச்னை ஏற்படுமா? பல்லை அகற்ற வேண்டுமா?
பற்சொத்தை ஏற்படும் பற்களில் பற்குழி ஆழமாகி, உள்ளே இருக்கும் தசை பகுதியை அரிக்கிறது. பல் நடுவில் உள்ளே பற்கூழ் நரம்பு, ரத்தக்குழாய் இணைந்த பகுதியை உறுத்துவதால் தசை எரிமலைபோல் வளரும். இதனால் அச்சப்படத் தேவையில்லை. ஈறுகள் மேல் உள்ள பற்குபதியில் அதிக சேதம் இன்றி இருந்தால், பல்வேர் சிகிச்சை மூலம் கவர் அணியலாம். ஈறுக்கு மேல் உள்ள பல், மிக சேதமடைந்திருந்தால், அப்பல்லை நீக்குவது நல்லது.
*என் மகன் முகத்தின் வலது, இடது பக்கங்களில் வேறுபாடு உள்ளது. சிரிக்கும் போது ஒரு பக்கமாக சிரிக்கிறார். தீர்வு உண்டா?
மனிதர்கள் முகத்தில் வலது, இடப்பக்கங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என அவசியமில்லை. அனைவருக்கும் சிறிது வேறுபாடு இருக்கும். இது பெரிதாக இருந்தால் புலப்படும். வலது, இடப்புறம் குழந்தை வளர் பருவத்தில் சமமின்றி இருந்தால், தாடை வளர்ச்சியை தேவைக்கேற்ப அதிகரித்தோ அல்லது குறைத்தோ பல் சீரமைப்பு நிபுணர் சரி செய்வார். குறைபாடு வெறும் பற்கள் சார்ந்ததாக இருந்தால், பற்களில் கிளிப் அணிந்து, பற்களை நகர்த்தி சரி செய்யலாம். வளர் பருவத்தை கடந்து, தாடை எலும்புகளில் பிரச்னை இருந்தால், ஆப்பரேஷன் மூலம் சரி செய்யலாம்.
*எனக்கு சிங்கப்பல் இல்லை. எக்ஸ்ரே எடுத்ததில், பற்களில் நீர் கோர்த்திருப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என டாக்டர் கூறினார். அப்பற்களை அகற்ற வேண்டுமா? சில நேரங்களில் நம் தாடையில் இடக்குறைபாடு, பற்கள் முளைப்பதில் இடையூறு இருந்தால் சில பற்கள் தாடையில் உள் புதைந்து வளராது. இப்பற்களைச் சுற்றி நீர் கோர்த்து 'சிஸ்ட்' என்ற நிலை உருவாகும். டாக்டர் எவ்வகை 'சிஸ்ட்' என முடிவு செய்தபின், அப்பல்லை காப்பாற்ற முடியாவிடில் அதை அகற்றுவது அவசியம். 'சிஸ்ட்' இருக்கும் போது சிகிச்சை பெறாமல் விட்டுவிட்டால், அது எலும்பை அரித்து, உடைவதற்கு காரணமாகிவிடும். புற்றுநோய் கட்டியாகக்கூட மாற வாய்ப்புண்டு.
-டாக்டர் எஸ்.முத்துராமன்,மதுரை, 94430-61160.